சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்டநிலை ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகிப்பவர் பெரியகருப்பன் மகன் சுந்தரராஜன் (வயது 48). இவர், நாம் தமிழர்கட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.
ஜெயங்கொண்டநிலையில் 13 கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெயங்கொண்டநிலை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுந்தரராஜன், தான் பதவிக்கு வந்தால் ஊராட்சியில் கூட்டப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் வென்ற பின்பு வாக்குறுதி அளித்தபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரராஜன் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று நல்லாண்டி கண்மாய் என்ற பருவி கண்மாயில் வெள்ளைச்சாமி என்பவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் தனது பட்டா இடத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கான இடங்களை ஆக்கிரமித்து வைத்திருந்ததை அகற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜு, ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரராஜன் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய காவலர்கள் சென்றபோது ஆக்கிரமிப்பு செய்திருந்தவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசின் மனைவி சாந்தினி அரசு அலுவலர்களை மிரட்டும் வகையில் தீக்குளிக்க முயற்சி செய்த்தாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மற்றும் சிலர் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது காவல்துறையினர் அவரைக் காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பியுள்ளனர். சிறு தொலைவில் மீண்டும் அவரது காரை வழிமறித்து 15 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆகியோர் கார் கண்ணாடி மீது கல் மற்றும் செருப்புகளை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் ஊராட்சி மன்றத் தலைவரை காரிலிருந்து வெளியே இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது கழுத்தில் வெட்ட முயன்றபோது கையை வைத்து தடுத்து உள்ளார். அதனால் சுந்தரராஜனின் வலது கையில் இரண்டு இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம்புணரி அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தன்னை தாக்கியது நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களான ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள்தான என ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வருவாய் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கிராம நிர்வாக அலுவலரும் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் ஜெயங்கொண்ட நிலை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
– பாரூக், சிவகங்கை.