இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சில விதிகள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உள்ளன என்பது தெரிந்ததே.ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்பட சில பொதுவான விதிகள் அனைத்து ஓட்டுனர்களுக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் செருப்பு அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் என்பது உங்களுக்கு தெரியுமா?
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது நீங்கள் சரியான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும்போது முழுமையாக மூடிய காலணிகளை அணிய வேண்டுமாம். சாதாரண செருப்பு அணிந்து வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம்.
அத்துடன் ஒரு நபரிடம் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் இருப்பது சட்டப்படி குற்றம். உங்களிடம் இரண்டு ஓட்டுனர் உரிமம் இருப்பது கண்டறியப்பட்டால் உங்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.
மேலும் ஆம்புலன்ஸ் உள்பட எந்தவொரு அவசர சேவை வாகனத்திற்கும் வழி வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் யாரேனும் அத்தகைய வாகனத்தின் பாதையை தடுப்பது அல்லது குறுக்கீடு செய்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அவசரகால வாகனங்களில் தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ், போலீஸ் கார் மற்றும் பிற அடங்கும்.
வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் விதிவிலக்கு உள்ளது. எந்தவொரு ஓட்டுனரும் தங்கள் வாகனத்தை இயக்கும் போது, வழி கேட்பதற்காக செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இதை தவிர வேறு எதற்கு செல்போனை பயன்படுத்தினாலும் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியவர் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்தவொரு நபரும் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவராக இருந்தால், அவர் வாகனம் ஓட்டக்கூடாது. அவ்வாறு தகுதியற்றவர் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படுமாம்.
விதிகள் நமக்கானவை! எனவே, பத்திரமான பயணத்திற்கு போக்குவரத்து விதிகளைத் தவறாது கடைப்பிடிப்போம்.
-Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.