தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தல் முயற்சி போதை மாத்திரைகளை இலங்கையில் தயாரிக்க இங்கிருந்து கடத்தப்படுவதாக தகவல் கடத்தப்பட்ட படகும், வலி நிவாரண மாத்திரைகளும் கியூ பிரான்ச் போலீஸாரால் பறிமுதல். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதிவு எண் இல்லாத படகு ஒன்று நின்றுள்ளது. அதனை போலீசார் சோதனை செய்தபோது அதில் அட்டை பெட்டிகள் ஏற்றப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த அட்டைப்பெட்டிகளை பிரித்து சோதனை செய்து பார்த்தபோது அதில் 439 அட்டைகளில் 4500 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்பதுடன் மாத்திரைகள் வாங்கியதற்கான ரசீது போன்றவைகள் அவர்களிடம் இல்லை எனவும் தெரிய வந்தது.
அதனால் சந்தேகம் அடைந்த க்யூ பிரான்ச் போலீசார் மாத்திரையை கடத்திய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த வலி நிவாரண மாத்திரைகள் இங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும் அங்கு போதை மாத்திரைகள் தயாரிக்க பயன்படுவதாகவும் தெரியவந்தது. இதனை எடுத்து கியூ பிரான்ச் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகினையும் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளையும் கைப்பற்றி தருவைகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,தூத்துக்குடியில் இருந்து,
-வேல்முருகன்.