பெண் டாக்டரிடம் இணையதளம் வாயிலாக, 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, பீளமேட்டை சேர்ந்த, 32 வயது பெண் டாக்டர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.புகாரில் கூறியிருப்பதாவது: நான் மனநல மருத்துவராக உள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமண தகவல் மையம் வாயிலாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார்.
மேலும், அவர் தான் இந்தியாவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற உள்ளதாகவும் கூறினார். இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தோம்.
இந்நிலையில் பெண் ஒருவர், தான் டில்லி விமான நிலையத்தில் உள்ள சுங்க வரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுஷன் ஜியான், தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்து இருப்பதாகவும், அவர் ஒரு லட்சம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில், 82 லட்சத்து 51 ஆயிரத்து 48) கொண்டு வந்து இருப்பதாகவும், இதற்கு வரியாக, 19 லட்சத்து 59 ஆயிரத்து 920 ரூபாயை உடனடியாக அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறும் கூறினார்.
இதையடுத்து, நான் உடனடியாக பணத்தை தயார் செய்து, அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து நான் யுஷன் ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் இது மோசடி கும்பல் என்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்து பணத்தை பெற்று தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவைமாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.