சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்து வந்த உழவர் சந்தை தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. உழவர்சந்தையில் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்துகின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வந்து விவசாயிகளிடமிருந்து, அவர்களது விளைபொருட்களை வாங்கிப் பயனடைந்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் மேலூர் அருண் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, நீண்ட பல வருடங்களாக செயல்படாமல் இருந்த சிங்கம்புணரி உழவர் சந்தையை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்,
என்ற சிங்கம்புணரி – எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையையும், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல முறை கோரிக்கைகள் வைத்த சூழ்நிலையில், அதை ஏற்று கடந்த சில நாட்களாக சிங்கம்புணரி உழவர் சந்தை சிறப்பாக செயல்பாட்டிற்கு வந்திருப்பதைக் காண்பதில் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். உழவர் சந்தை சிறப்பாக செயல்பட உதவிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சிதலைவர் மதுசூதனன் ரெட்டி அவர்களுக்கும், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில் அவர்களுக்கும், வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம் சிவகங்கை) சுரேஷ், சிங்கம்புணரி வேளாண் உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) ராதா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தினசரி 100 ரூபாய்க்கு மேல் காய்கறி வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் மற்றும் ஒரு தேங்காய் இலவசமாக வழங்கி வருகிறார்கள். விவசாயிகள் வாழ, உழவர் சந்தையை மேம்படுத்த அன்பளிப்பு கொடுத்துதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் விளைபொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு பல திட்டங்களை வகுத்து, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாகத் திகழ்ந்துவரும் வேளாண் உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) ரத்னா காந்தி அவர்களுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று சிங்கம்புணரி உழவர் சந்தைக்கு நேரில் வந்த தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் மேலூர் அருண், வேளாண் விற்பனை அலுவலர் ரத்னா காந்திக்கு விவசாயிகளின் சார்பாக பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.