புதர் சூழ்ந்த ஹிந்துக்கள் மயானத்தில் சிறுத்தை பதுங்குவதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். வால்பாறை நகரில், அரசு மருத்துவமனைக்கு பின்பக்கம், ஹிந்துக்கள் மயானம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த மயானத்தை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். சில நேரங்களில் புதரில் சிறுத்தை பதுங்குவதால், மயானத்துக்குள் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடம் தண்ணீர் இல்லாமல் காட்சிப்பொருளாக மாறிவருகிறது. இதனிடையே மயானத்தில் பகலில் ஓய்வெடுக்கும் சிறுத்தை, இரவு நேரத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து விடுகிறது.இதனால், மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. புதரை அகற்ற நகராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரிலுள்ள ஹிந்துக்கள் மயானத்தில், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாத நிலை உள்ளது. மயானம் முழுக்க புதர்சூழ்ந்து காணப்படுகிறது.பகல் நேரத்தில் புதரில் சிறுத்தை ஒய்வெடுப்பதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது. குளியல் அறை, கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாக உள்ளது.நகராட்சி சார்பில், மயானத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி,குளியல் அறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.