கோவையில், அரசுப் பள்ளி சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, உடற்கல்வி ஆசிரியர் போக்சோ’வில் கைது செய்யப்பட்டார். கோவை குனியமுத்துார் அடுத்த சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 570 மாணவ மாணவியர் படிக்கின்றனர். ஒரு வாரத்துக்கு முன், வால்பாறை அரசுப் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன்(56) இங்கு மாற்றப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளியில் பயிலும் ஐந்து சிறுமியரின் பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பிரபாகரன் தங்கள் மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதாக தலைமையாசியர் பிரபாவிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று காலை சிறுமியரின் பெற்றோர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, சரவணம்பட்டியில் இருந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆசிரியர் கைது செய்யப்படவில்லை என தகவல் பரவியதால், இவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். கைது செய்யப்பட்டதை உறுதி செய்த பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேற்கு அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் மீது ‘போக்சோ’வில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பிரபாகரனை ‘சஸ்பெண்ட்’ செய்து, பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.