பல்லடம், கோடங்கிபாளையம் ஊராட்சி, பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி, 53, குடும்ப சூழல் காரணமாக, முத்துசாமியின் தாயார் அருக்காணியம்மாள் தானமாக வழங்கிய சொத்துகளை, அவரின் மனைவி மல்லிகா விற்க முயன்றார். இதற்காக, கோபிநாத் என்ற இடைத்தரகரை நாடினார். கடந்த டிச., மாதம், கோபிநாத் பெயரில் பவர் பத்திரம் எழுதப்பட்டது. அதன்பின் கோபிநாத்தை தொடர்பு கொண்ட போது சரியான பதில்கூற மறுத்து வந்தார். சந்தேகமடைந்து வில்லங்க சான்றை சரிபார்த்த மல்லிகா அதிர்ச்சியடைந்தார். பவர் பத்திரம் பெற்ற கோபிநாத், சத்தியன் என்பவருக்கு, 35 லட்சம் ரூபாய்க்கு மல்லிகாவின் சொத்தை விற்பனை செய்திருந்தது தெரிந்தது.
இந்த மோசடிக்காக போலி மருத்துவ சான்று தயாரித்து, முறைகேடாக பத்திரப்பதிவும் செய்துள்ளார். இதனால், கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் மல்லிகா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், சோமனுாரில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் தீபக் சாகர் கூறுகையில்,”எனது மருத்துவமனையின் ‘லெட்டர் பேடை’ முறைகேடாக பயன்படுத்தி வாழ்நாள் சான்று போலியாக தயாரித்ததுடன், அதில் எனது கையெழுத்தையும் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா, திருப்பூர்.