தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பொறுப்பு வகித்துவந்தவர் ஆனந்த தாண்டவம். இவர், கடந்த 2019ல் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலையத்தின் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது அவரிடம் ஒத்தக்கடையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி கோமதி, ‘தன்னிடம் கட்டிடப் பொறியாளர் முருகன் என்பவர் வீடு கட்டி தருவதாகக் கூறி, பேசிய தொகையைவிட ₹.5 லட்சம் கூடுதலாகப் பணம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி முடிக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்’ கடந்த 2019, அக்டோபர் 23ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து பொறியாளர் முருகனையும் கோமதியையும் அழைத்து விசாரணை செய்திருக்கிறார் ஆனந்த தாண்டவம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அடிக்கடி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வந்து சென்றதால் கோமதிக்கும், ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் மீறிய தகாத உறவாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் இணைந்து வாழ்ந்துவந்துள்ளனர். அப்போது கோமதியிடமிருந்து, ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் ₹.5.5 லட்சம் பணம் பெற்றிருக்கிறார். இதற்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் உறவினர்கள் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இதுகுறித்து ஆனந்த தாண்டவத்தின் மீது கடந்த ஏப்ரல் மாதல் டி.ஜி.பி அலுவலகத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.
அத்துடன் முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையத் தலைவர், தென் மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் உள்ளிட்டோருக்கும் கோமதி தபால் மூலம் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், “முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே சட்டத்துக்குப் புறம்பாக யாருக்கும் தெரியாமல் நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைத்து ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் எனக்கு வற்புறுத்தி தாலி கட்டினார். பாலியல் இச்சைக்கு உட்படுத்தினார்.
நான் கட்டிவந்த வீட்டின் வேலையை முடித்துத் தருவதாக ₹5 லட்சத்துக்கு மேல் பணத்தை வாங்கிக்கொண்டு, வீட்டையும் கட்டித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் ஆனந்த தாண்டவம் தூத்துக்குடி மாவட்டத்துக்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கோமதியின் புகார் மனு குறித்து துறைரீதியான விசாரணை நடந்துவந்தது. விசாரணையில் ஆனந்த தாண்டவம் மீதான புகாரில் குற்றச்சாட்டு ஊர்ஜிதமானது. இந்நிலையில், தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் தற்போது ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
– ராயல் ஹமீது.