சென்னை: மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று சென்னையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டுள்ளதாக ஆளும் திமுக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் உயர்த்தப்பட்ட வரி, கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தமிழக அரசு அதனை பரிசீலனை செய்யவில்லை. இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்தது. இதுதொடர்பாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ஜூலை 25ல் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஆனால் ஜூலை 25ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்க உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.