இந்தியா முழுவதும் தங்க நாற்கர திட்டம் என்ற பெயரில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் நோக்கமே முக்கிய நகரங்களை இணைப்பது, பயண நேரத்தை குறைப்பது, வாகன நெரிசலை குறைப்பது, உள்ளிட்டவை ஆகும். இது போன்ற சாலைகளை பராமரிக்க நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணங்கள் பெறப்படுகின்றன.
இது மக்களுக்கு கையை கடிக்கும் செலவு என்றாலும் தொலைதூர பயணங்களின் போது விரைவாகவும் குண்டு குழியில்லாமல் நிம்மதியாகவும் செல்வதால் இந்த டோல் கட்டணத்தை மக்கள் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆண்டுகள் ஆக ஆக பல நெடுஞ்சாலைகள் தரமில்லாமல் உள்ளன. அந்த வகையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
ஆந்திர மாநில தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடியாகும். இந்த சுங்கச் சாவடியை கடக்கும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் பெறப்படுகிறது. எனினும் சாலைகளை பராமரிக்கப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு இந்த சுங்கச் சாவடிக்குள்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பல பணிகள் முடிக்கப் பெறாமல் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி- மதுரை 4 வழிச்சாலையில் விளக்குகள் பொருத்தாமல் உள்ளது. சாலையின் நடுவே செடிகளை வைக்காதது, இரு பக்கமும் எல்லைகளை குறிக்கும் வண்ணக்கோடுகள் இல்லாதது, பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துமிடம் இல்லாதது, கழிப்பறை வசதிகள் இல்லை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து அரசின் உத்தரவை பின்பற்ற தவறியதாக ஆந்திரா தனியார் நிறுவனத்திற்கு ரூ 400 கோடியை அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சுங்கச்சாவடி நுழைவு பகுதியே குண்டும் குழியுமாக பராமரிப்பின்றி காணப்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சுங்கச்சாவடியை அகற்ற கோரி பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சுங்கச்சாவடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி .