வருமான வரி அறிக்கையைத் தயார் செய்து, எவ்வளவு தொகை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டாலும், தாமதம் ஆகும் போது, கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட தேதி தான் இறுதி தேதி என்று வருமான வரித் துறையால் அறிவிக்கப்படும். கடந்த நிதியாண்டுக்கான (FY 2021-22 AY 2022-23 ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 2022 ஆகும். தணிக்கைத் தேவைப்படாத வருமான வரிக் கணக்குகளுக்கு ஜூலை 31க்குள் IT ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் மற்றும் தாமதமான ஃபைலிங் செய்யும் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும். ஒரு வேளை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234F இன் படி தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் விதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், ITR தாக்கல் செய்வதை தாமதம் செய்தால், ரூ. 5,000 வரை Late filing fee விதிக்கப்படும். இருப்பினும், அனைவருக்கும் இது பொருந்தாது. குறைவான தொகையை வரியாக செலுத்துவோருக்கு, அதாவது வருமான வரி கணக்கிடப்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகாமல் இருந்தால், தாமதமாக ITR தாக்கல் செய்யும் கட்டணமாக ரூ.1,000 விதிக்கப்படும். மேலும், நீங்கள் ITR தாக்கல் செய்யும் முன்பே, இந்த லேட் ஃபைலிங் கட்டணத்தை செலுத்த வேண்டும். வருமான வரி அறிக்கையில், நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி, வணிகம் செய்பவராக இருந்தாலும் சரி, வேறு வணிகம் அல்லது பங்குகள் வணிகத்தில் ஏற்படும் நஷ்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ஃபார்வேர்ட் செய்ய முடியாது.
நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும், ITR தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டத்தில், அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றால் உங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட TDS தொகை, Tax Refund கிடைக்காது. Tax Refund கிடைக்கத் தாமதமானால், உங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம் அளவுக்கு தாமதமாகும் காலம் மற்றும் தொகைக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும். ஆனால், நீங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்தினால், Tax Refund தாமதத்திற்கு வட்டி கிடைக்காது.
நீங்கள் வருமான வரி அறிக்கையைத் தயார் செய்து, எவ்வளவு தொகை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டாலும், தாமதம் ஆகும் போது, கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டும். வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 234A, 234B மற்றும் 234C ஆகிய மூன்று பிரிவுகளில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால், அதிகபட்சமாக டிசம்பர் 31, 2022 ஆம் தேதிக்குள் ITR தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால், கடந்த நிதியாண்டுக்கான ITRஐ தாக்கல் செய்ய முடியாது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.