கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைக்காரன் புதூரில் தர்மராஜ் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்திவந்துள்ளார். இவருடைய கோழி கடைக்கு ஜூன் 13-ஆம் தேதி அன்று மதியம் 12 மணியளவில் குருநாதன் என்பவர் வந்து தான் அரசு சுகாதார ஆய்வாளர் என்றும் உங்களது கோழிக்கடை முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளதாகவும் அதற்காக கடைக்கு சீல் வைப்பதாகவும் கூறியுள்ளார்.
இல்லையென்றால் பணம் ரூ. 2500/- கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அதற்கு தர்மராஜ் பணம் ரூ. 500 மட்டும் கொடுத்துள்ளார். உடனே குருநாதன் மேற்படி பணத்துக்கு ரசீது கொடுப்பதாக சொல்லி ஓடி சென்று விட்டார்.
பின்னர் மேற்படி குருநாதனை தேடிப் பார்த்தபோது காளியாபுரம் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தவரை தனது நண்பர்கள் வினோத்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உதவியுடன் காவல் நிலையம் கூட்டி வந்து மேற்படி குருநாதன் மீது நடவடிக்கை வேண்டி புகார் கொடுத்துள்ளார்.
எனவே புகார் கொடுத்ததின் பேரில் ஆனைமலை காவல் நிலையத்தில் போலீசார் பழனி சண்முக புரத்தைச் சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.