ஆடிப்பெருக்கு விழா அன்று கோவை மாவட்டம் ஆனைமலை நகரில் அதிகமாக விற்பனையாகும் பொருள் பாப்பட்டான் குழல் ஆகும். இந்தப் பாப்பட்டான் குழல் இப்பகுதியில் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக உலகிலேயே வேறெங்கும் பாப்பட்டான் குழல் கிடைக்காது என்று கூறலாம்.
அதுவும் ஆடிப்பெருக்கு காலத்தில் மட்டுமே! பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய சிறு காய்
ஆனைமலை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும்.
அச்சிறுகாய் நுழையும் வகையில் அளவான மரத்துண்டில் துளையிடுவர். அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார்
செய்வர். துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைப்பர்.
வண்ணத்தாள்களால் அலங்கரிப்பர். இப்பொழுது பாப்பட்டான் குழல் தயார். ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து, மரத்தண்டுத் துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும் கூம்பு வடிவம்
அவ்வொலியைப் பெரிதுபடுத்தும்.
அது பொட்டுப்பட்டாசு (கொள்ளுப்பட்டாசு) வெடிப்பதைப் போன்று கேட்கும். நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறுவர், சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் வாங்கி விளையாடுவார்கள். எனவே இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பாப்பட்டான் குழல் தயாரிக்கும் பணி ஆனைமலையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.