கோவை ,குறிச்சி மற்றும் குனியமுத்துாரில், பாதாள சாக்கடை பணி மந்தமாக நடப்பதால், ரூ.30 கோடியை விடுவிக்காமல், கோவை மாநகராட்சி நிறுத்தி வைத்திருக்கிறது. கோவை பழைய மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது; விடுபட்ட இடங்களிலும், உடைப்பு ஏற்படும் பகுதிகளிலும் புதிதாக குழாய் பதிக்கப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இணைக்கப்பட்ட பகுதிகளில், குறிச்சி மற்றும் குனியமுத்துாருக்கு தனித்திட்டமாகவும், மற்ற பகுதிகளுக்கு தனித்திட்டமாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப் படுகிறது.இதில், குறிச்சி – குனியமுத்துார் திட்டத்தை, ‘எல் அண்டு டி’ நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருக்கிறது; கடந்த, ஜன., மாதமே ஒப்பந்த காலம் முடிந்து விட்டது.இன்னும் வேலையை முழுமையாக முடிக்காமல், ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் ஊரடங்கை காரணம் காட்டியதால், 2023, மார்ச்சுக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. பிரதான சாலைகளில் குழாய் பதிப்பது; ‘பம்ப்பிங்’ ஸ்டேஷன் கட்டும் பணிகள் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.இதில், மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோட்டில், சுந்தராபுரத்தில் இருந்து அறிவொளி நகர் ரோடு சந்திப்பு வரை ‘சேம்பர்’ கட்டி, குழாய் பதிப்பது ஆமை வேகத்தில் நடக்கிறது. இச்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றி, நான்கு வழியாக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கி, ஒப்பந்த நிறுவனத்துக்கு ‘ஆர்டர்’ வழங்கியிருக்கிறது.
பாதாள சாக்கடை வேலை முடிய தாமதமாவதால், சாலை விரிவாக்கப் பணியை துவக்க முடியாமல், அத்துறையினர் தவிக்கின்றனர்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டபோது, ”குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, குறிச்சி – குனியமுத்துாரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. மிகவும் மந்தமாக இருப்பதால், 30 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நேரில் ஆய்வு செய்து, பணி விரைவுபடுத்தப்படும்,” என்றார்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாம் விரைவில் சரியாக வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.