இரண்டு கைகளையும் இழந்த வாலிபருக்கு மூளைச்சாவில் இறந்த பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கைகளை இழந்த வாலிபருக்கு இறந்த பெண்ணின் கைகள் பொருத்தம். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மருத்துவர் சாதனை படைத்த மருத்துவருக்கு சொந்த ஊரில் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வ சீதாராமன் எனும் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர். இவர் சென்னையில் உள்ள க்ளோபஸ் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு துறை தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவர், இரண்டு கைகளையும் மின்சார விபத்தில் இழந்து தவித்த 24 வயது வாலிபர் ஒருவருக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூளை சாவு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கையை பொருத்தி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அந்தப் பெண்ணின் கை சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்திலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அந்த கைகளை இழந்த வாலிபருக்கு பொருத்தப்பட்டது.
வெகு தொலைவில் இருந்து ஒரு பெண்ணின் கையை எடுத்து வந்து ஆணுக்கு பொருத்திய இந்த பிளாஸ்டிக் சர்ஜரி சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை படைத்த மருத்துவர் செல்வ சீதாராமனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் சென்று பாராட்டி உள்ளார்.
இந்த நிலையில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் மருத்துவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சால்வை அணிவித்து பாராட்டி பூங்கொத்து வழங்கினர். மருத்துவர் செய்த இந்த சாதனை செயல் தூத்துக்குடி மட்டுமல்லாது பல மாவட்டங்களில் பேசப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.