கோவை நகரில் நேற்று ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. வாகனப்போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலை முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாயினர்.
கோவையில் நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு, மீண்டும் விஸ்வரூபமெடுத்து, மாலை 4:30 மணி வரை கொட்டித்தீர்த்தது. நகரில் தாழ்வான இடங்கள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில், மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கோவை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள, வணிக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.
பொன்னையராஜபுரம் அருகே உள்ள, முத்தண்ணன் குளத்திலிருந்து செல்வசிந்தாமணி குளத்திற்கு செல்லும் மழைநீர் கால்வாயிலிருந்து வெள்ளம் வெளியேறி, பிருந்தாவன் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.புலியகுளம் மசால் லேஅவுட்டிலுள்ள, குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் நுழைந்தது. அதே போல் திருச்சி சாலை சுங்கம் அருகேயுள்ள, தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வடிவமைக்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா, வாலாங்குளம், பெரியகுளம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். பல கோடி ரூபாய் செலவழித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், மழைநீர் வடிந்து செல்வதற்கான வழிமுறைகளை, சரியாக செய்யாததால் ஒவ்வொரு மழையிலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன்.