காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று பகல் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையின் 16 கண் மதகு மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்திருந்த வாழை, பருத்தி, மற்றும் மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. அனல் மின் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேட்டூர் அணை அருகே உள்ள தங்கமாபுரி பட்டணத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்களை வெளியேறுமாறு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அங்குள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் 16 கண் மதகு அருகே காவிரி கரையோரத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் அவரை வருவாய்த் துறையினர் மீட்டனர். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கலைமகள் வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இப்பகுதியில் வசித்து வந்த 30 குடும்பங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டவர்கள் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வந்த 3 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளி பாளையம் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈராடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த இடம் தெரியாமல் பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. காவிரி கரையேர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரஞ்சித் குமார், திருச்செங்கோடு .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp