கோவை:ரூ.7.48 கோடியில், கோவையில் மூன்று இடங்களில், பாதசாரிகளுக்காக, ‘ஸ்மார்ட் ரோடு’ உருவாக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியிருக்கிறது.கோவையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், வாகன நெருக்கடிக்குள் சிக்கி அவதிப்படுகின்றனர். அதிக வாகனங்கள் இயக்கத்தால், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
இதற்கு தீர்வு காண, வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில், பாதசாரிகள் சிரமமின்றி நடந்து சென்று, பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக, ‘ஸ்மார்ட் ரோடு’ உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதில், டவுன்ஹால் மணிக்கூண்டு முதல் போத்தீஸ் சந்திப்பு வரை ரூ.1.87 கோடி; ராஜவீதியில் பெட்ரோல் பங்க் வரை ரூ.1.73 கோடி; கிராஸ்கட் ரோட்டில் லட்சுமி காம்ப்ளக்ஸ் வரை ரூ.1.63 கோடி லட்சுமி காம்ப்ளக்ஸ் முதல் பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை ரூ.2.25 கோடி என, நான்கு ‘பேக்கேஜ்’களாக பிரித்து, ‘ஸ்மார்ட் ரோடு’ உருவாக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு, 7.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மோட்டார் வாகன பயன்பாடு அல்லாத, பாதசாரிகளுக்கான பாதை உருவாக்கும் திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. 3-4 மீட்டர் அகலத்துக்கு, இட வசதிக்கேற்ப நடைபாதை உருவாக்கப்படும். ஆங்காங்கே பசுமை பகுதி ஏற்படுத்தப்படும். ரோட்டின் இருபுறமும் தொலைத்தொடர்பு ஒயர் கொண்டு செல்ல தனி கட்டமைப்பு, மழை நீர் வடிகால் கட்டப்படும். டவுன்ஹால் மணிக்கூண்டு மற்றும் போத்தீஸ் சந்திப்பு பகுதி மேம்படுத்தப்படும். மூன்று மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுதான் வேலை துவங்கியிருப்பதாால், 2023 பிப்.,க்குள் முடித்து விடுவோம்” என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
–சி. ராஜேந்திரன்.