தமிழ்நாடு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாணவிகள் நடத்திய மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் அம்பலமுத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் தலைமையில் கல்லூரி மாணவிகள் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, சந்திவீரன் கூடம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்த இந்தப் பேரணி, பொதுமக்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தேசியத் தலைவர்கள், தேசியப்பறவை மற்றும் சுதந்திர தின விழிப்புணர்வு குறித்து மாணவிகள் வரைந்த ஓவியங்களை கையில் ஏந்தியவாறு மாணவிகள் பேரணியில் வந்தனர்.
இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில், முனைவர் S.S.சுப்பிரமணியம், லயன்ஸ் கிளப் தலைவர் C.V.ஜெயக்குமார், அன்னை வேளாங்கண்ணி பள்ளியின் முன்னாள் மாணவியும் பேரூராட்சி கவுன்சிலருமான மீனா மனோகரன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்களும், உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மாணவிகள் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சம்பந்தமான முழக்கங்களை வழி நெடுகிலும் எழுப்பிச் சென்றனர்.
பேரணியின் நிறைவில் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் கல்லூரி முதல்வர் கூற, பேரணி நிறைவுற்றது.
பேரணியை, கல்லூரியின் N.S.S ஒருங்கிணைப்பாளரும், கணிதத்துறை தலைவருமான முனைவர் சுதா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.