மதுரை மாவட்டம், கருங்காலக்குடியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 40). இவர் மீது இட பிரச்சினை தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே பிரச்சினை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், ஒரு பிரச்சினை சம்பந்தமாக ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியுமென்றும், அதற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தால், இரண்டாவது இடத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹக்கீமை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்திய போது இதன் காரணமாக அவரை சிறைக்கு அனுப்பாமல் சொந்த பிணையில் நீதிபதி விடுவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சிவகங்கையில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஹக்கீம், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர், வழக்கை ரத்து செய்ய ஹக்கீமிடம் ₹.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹக்கீம், இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின்பேரில் ரசாயன பவுடர் தடவிய ₹.20 ஆயிரத்துக்கான பணநோட்டுகளை சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம், ஹக்கீம் கொடுத்தார்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன், காவல் ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.