தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முத்துலாபுரம் முதல் நென்மேனி வரை வைப்பாற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி மரங்கள் நட்டு பராமரிப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக வைப்பாற்றும் கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக விளாத்திகுளம் வைப்பாற்றங்கரை மற்றும் ஆற்றுக்குள் அடர்ந்து வளர்ந்து இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
2-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் கிழக்குப் பகுதியில் இப்பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று 3-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து நென்மேனி வரையில் வைப்பாறு மற்றும் அதன் கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. மரங்கள் மக்கள் இயக்கம் இணை நிறுவனர் செல்வகுமார் வரவேற்றார். நீர்வளத்துறை வைப்பாறு உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஸ்ரீராம், நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலப்பிரிவு விளாத்திகுளம் உதவி பொறியாளர் நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன், தூத்துக்குடி.