சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பிரிவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து, தெரு விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
இதில் ஆறுமுகம் (68) (இவரது மகன் தெய்வேந்திரன் ஒரு ராணுவ வீரர்), சண்முகநாதன்(31), சந்திரசேகரன் (34) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கொடூரக் காயங்களுடன் அன்றே உயிரிழக்க, தனசேகரன், மலைச்சாமி, சுகுமாரன், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய ஐவர் உடம்பிலும் தலா 40-50 வெட்டுக் காயங்களுடன் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
கொடுங்காயத்தால் உடல் நலிவடைந்த தனசேகரன் (32) என்பவர் சம்பவம் நடைபெற்று 1½ ஆண்டுக்கு பிறகு இறந்தார்.
இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டனர். 3 பேர் சிறுவர்களாக இருந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
இந்தக் கொலைவெறித் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சண்முகநாதன், கச்சநத்தம் மக்களுக்கு ஒரு கதாநாயகன். எம்.பி.ஏ பட்டதாரியான சண்முகநாதன், கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை ஒதுக்கிவிட்டு, தன் கிராமத்தில் இருக்கும் 20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வந்தார். அவரது அப்பா அறிவழகன், அரசு ஐடிஐ நிறுவனத்தில் துணை பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா பள்ளி ஆசிரியை. இளைஞர்களை வழி நடத்துவது, படிப்புக்கு உதவுவது, கல்விக்கடன் வாங்கித் தருவது, டியூஷன் நடத்துவது, விவசாயப் பயிற்சி அளிப்பது, ஊரணியை சுத்தம் பண்ணுவது என ஒரு தன்னார்வலராக செயல்பட்டு வந்திருக்கிறார்.
தன் சமூக இளைஞர்களிடம் கஞ்சா விற்க சாதி இந்துக்கள் முயன்றபோதும், ஆடு கோழிகளை திருடிச் சென்ற போதும் அதைக் கண்டித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சண்முகநாதன். அன்றிரவு வீட்டிற்கு வந்தவர் அசதியில் தூங்கிவிட்டார். தூக்கத்திலேயே அவரை வெட்டிச் சாய்த்தது கொலைக் கும்பல். நடப்பதை உணரவோ, எழவோ, தடுக்கவோ அவருக்கு அவகாசமே அளிக்கப்படவில்லை.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவரோடு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி மாடிக்கு ஓட முற்பட, அவரின் உயிர் போகும்படி கூறுபோட்டுவிட்டு அந்தக் கும்பல் நகர்ந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 பேர் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விவரத்தை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, பின்பு 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இந்நிலையில், கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன், நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எட்டு பேர் வெட்டி சாய்க்கப்பட்ட இந்த வன்கொடுமை, எல்லோரும் நிறுவ முனைவது போல ‘ஒரேயொரு குறிப்பிட்ட சம்பவத்தின் தூண்டுதலோ, எதிர்வினையோ அல்ல. மாறாக காலங்காலமாக ஊறி வந்த சாதிய வன்மத்தின் விளைவு’ என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வழக்கை மிகச்சிறப்பாக நடத்தி 27 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த வழக்கறிஞர்கள் பகத்சிங், துஷாந்த்பிரதீப்குமார், சின்னராசு, திசைஇந்திரன், வேல்முருகன் மற்றும் ரோணிகா ஆகியோருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்தனர்.
– பாரூக், சிவகங்கை.