தமிழகத்தில் வட மாநில மக்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சென்னையின் சவுகார்பேட்டை, ராயபுரம், சிந்தாதிரிபேட்டை தொடங்கி கோவையின் ஒப்பனக்கார வீதி வரை ஏராளமான மார்வாடிகளும், வட இந்தியர்களும் குடியேறி விட்டனர். இந்தப் பகுதிகளுக்கு சென்றால் ஏதோவொரு வட இந்திய மாநிலத்தில் இருப்பது போன்ற தோற்றம் தான் ஏற்படுகிறது. அங்கு தமிழர்கள் சைக்கிள் ரிக்ஷாவும், ஆட்டோவும் ஓட்டிக் கொண்டு அடித்தட்டு மக்களாகவும், வட இந்தியர்கள் முதலாளிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். இதில் மதுரையும் விதிவிலக்கல்ல.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வாறு தமிழகத்தில் வட இந்தியர்கள் இடம், பொருள், தொழில் என பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். எனவே தமிழனுக்கு தாய் மொழியான தமிழ் மட்டும் தான் மிச்சம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளியில் ரிஷப் குமார் என்ற மாணவர் படித்து வருகிறார். இவருடைய தாய் மொழி இந்தி. இவர்களின் குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. பிழைப்பிற்காக கோவைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழிப் பாடத்திட்டத்தில் சேர்ந்து ரிஷப் குமார் படித்துள்ளார். தொடக்கத்தில் தமிழ் பாடங்கள் சிரமமாக இருந்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் ஆர்வத்துடன் படிக்க தொடங்கியுள்ளார். தற்போது தமிழில் சொந்தமாக கட்டுரைகள் எழுதும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். வெறுமனே தமிழ் பாடம் மட்டுமின்றி, தமிழ் இலக்கணமும் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனக் கூறுகிறார். இவரது தமிழ் கையெழுத்து அந்தப் பள்ளியிலேயே மிகச்சிறந்த கையெழுத்து என்று தலைமை ஆசிரியரே பாராட்டுகிறார்.
அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக ரிஷப் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தமிழ் மொழியில் 100க்கு 87 மதிப்பெண்கள் பெற்று அந்தப் பாடத்தில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்வாகியுள்ளார். மொத்தமாக 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழை கற்றறிந்து, தங்கள் ஆர்வத்தை வளர்த்து கொள்வது பெரிதும் பாராட்டுக்குரியது.
அதுவும் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்களையே மிஞ்சும் அளவிற்கு ரிஷப் குமாருக்கு ஏற்பட்டுள்ள தமிழ்ப் பற்று கட்டாயம் மதிக்க வேண்டிய விஷயம். ஏனெனில் நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்ததாக செய்தி வெளியானது. இது தமிழர்களை பெரிதும் சங்கடத்திற்கு உள்ளாக்கக் கூடிய விஷயமாக மாறியது. தாய் மொழியில் இப்படி கோட்டை விட்டு விட்டார்களே என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
வேறு மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வந்து நமது இடம், பொருள், தொழில் ஆகியவற்றை ஆக்கிரமித்து கொண்டு, தமிழ் மொழியிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இப்படியொரு சூழலில் அவர்கள் தமிழும் கற்று தேர்ந்து ஒட்டுமொத்த விஷயங்களையும் கையில் எடுத்துக் கொண்டால், தமிழர்களுக்கு மிச்சமிருக்கும் உரிமைகளை பற்றி எண்ணி பார்க்க வேண்டும். இந்த விஷயம் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண் என்று காலங்காலமாக சொல்லி வருகிறோம். அதற்காக எல்லாவற்றையும் வந்தவர்களுக்கே கொடுத்து விட்டு தமிழர்கள் நிர்கதியாக நிற்கக் கூடாது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. அதற்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும். அதேசமயம் தமிழர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.