திருப்பூர் சோளிபாளையம் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன்(65). இவரது மனைவி முத்துலட்சுமி(60). இரு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. கோபாலன், குமார் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 30ம் தேதி கோபாலன் வீட்டுக்கு ‘பிளம்பிங்’ வேலை செய்ய அருண் என்பவர் வந்துள்ளார்.
வீட்டில் தம்பதி மட்டுமே இருப்பதையும், பணப்புழக்கம் இருப்பதையும் தெரிந்து கொண்ட அருண் தன் நண்பர்களான அமர் மற்றும் தினேஷ் உதவியுடன் கோபாலன் வீட்டில் கொள்ளையடிப்பது தொடர்பாக திட்டமிட்டார். வேறொரு நண்பரிடம், டூவீலரை வாங்கி கொண்டு மூவரும் கோபாலன் வீட்டுக்கு சென்றனர். முத்துலட்சுமியை சந்தித்து பிளம்பிங் உட்பட சில பணிகளை முழுமையாக இன்னும் முடிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதை நம்பிய முத்துலட்சுமி வீட்டுக்குள் அழைத்து சென்றார். உள்ளே சென்றவுடன் அவரது கழுத்தை நெரித்து கொன்று அறையில் துாக்கில் தொங்க விட்டனர். பின்பு பீரோவில் இருந்த, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. ‘சிசிடிவி’ கேமரா பதிவில் சந்தேகப்படும் விதமான டூவீலரின் எண்ணை கொண்டு விசாரித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் லாட்ஜில் தங்கியிருந்த அருண், அமரன், தினேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
–அருண்குமார் கிணத்துக்கடவு.