வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு இதுவரை கோவை மாநகராட்சி பொது நிதியில், 30 கோடி ரூபாய் வரை செலவழித்திருப்பதால், இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசின் முடிவை, முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கடந்த, 2014ல் கோவையில் மேயர் இடைத்தேர்தல் நடந்தபோது, பிரசாரத்துக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெ., வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்தார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 61.62 ஏக்கர் தேர்வு செய்து, ரூ.168 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இதில், 50 சதவீத தொகையான ரூ.84 கோடியை தமிழக அரசு வழங்கும்; மீதமுள்ள, 84 கோடியை மாநகராட்சி பொது நிதியில் இருந்தோ அல்லது வங்கி கடன் பெற்றோ செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. வெள்ளலுாரில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சென்னை கோயம்பேடுக்கு இணையாக இருக்குமென சொல்லப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனத்தினர், 40 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிட்டு பஸ்கள் நிற்கும் ‘ரேக்’குகள், பயணிகளுக்கான நடைபாதை, வணிக வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்திருக்கின்றனர். பசுமை பகுதி அதிகரிக்க மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்துக்கு, 30 கோடி ரூபாயை மாநகராட்சி பொது நிதியில் வழங்கியிருக்கிறது. தமிழக அரசு,தனது பங்களிப்பு தொகையை விடுவிக்காததால் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை மாநகராட்சி நிறுத்தியது. பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட துவங்கியதும் மீண்டும் பணியை துவக்க, ‘டுபிட்கோ’ மூலம் கடன் பெறுவதற்கான முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டது.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். காந்திபுரம், உக்கடம் பகுதி மற்றும் பிரதான ரோடுகளில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் வழித்தடம்; எல் அண்டு டிபைபாஸ் ஆறு வழிச்சாலையாக மாற்றப்படுவது; செட்டிபாளையம் ரோடு மற்றும் ஈச்சனாரி ரோட்டை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர்.
இச்சூழலில், வெள்ளலுாரில் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட்டு, எல் அண்டு டி பைபாஸில் திருச்சி ரோடு மற்றும் அவிநாசி ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள இடத்தை தேர்வு செய்து புதிதாக கட்ட ஆலோசித்து வருவதாக, கலெக்டர் சமீரன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
இது, வெள்ளலுார் சுற்றுப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஏனெனில், மக்களின் வரிப்பணத்தில், 30 கோடி ரூபாயை செலவழித்து, பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதி கட்டப்பட்டு விட்டது. பஸ்கள் நிற்கும் ‘ரேக்’குகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இச்சூழலில், இத்திட்டத்தை கைவிட நினைப்பது, விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டபோது, ”வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட்டின் தற்போதைய நிலை தொடர்பாக, அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். அரசின் முடிவே இறுதியானது,” என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்த திட்டம்; அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கிய திட்டம் என்பதற்காக இருட்டடிப்பு செய்யாமல், கோவையின் தெற்கு பகுதி வளர்ச்சியை கருத்தில்கொண்டு, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை தொடர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.’அரசின் முடிவே இறுதியானது’ என அதிகாரிகள் தற்போது தெரிவித்திருப்பதால், தமிழக அரசின் நிலை என்ன என்பதை, இன்றைய விழாவில், முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு கோவை மக்களிடம் எழுந்திருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.