கோவையில் சுரங்க பாதைகள் மற்றும் பாலங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, சிறப்பு குழுக்களை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அமைத்திருக்கிறார்.
கோவையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. நகர் பகுதியில் மழை பெய்தால் எந்தெந்த இடங்களில் தேங்குகின்றன; மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை, மாநகராட்சி ஆய்வு செய்தது.லங்கா கார்னர் பாலம், அவிநாசி ரோடு பாலம், கிக்கானி பாலம், வாலாங்குளம் உபரி நீர் செல்லும் வழித்தடம் நிரம்பி திருச்சி ரோட்டில் செல்வது, மணியக்காரன் பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள பாலங்களில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், தண்ணீர் தேங்குவது கண்டறியப்பட்டது.
கிக்கானி பாலம் அருகே மோட்டார் பொருத்தி, தண்ணீரை பம்ப் செய்ய, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அறிவுறுத்தி இருக்கிறார். இதுதவிர, ஏழு சிறப்பு குழுக்களை நியமித்திருக்கிறார்.
சிவானந்தா காலனி, கிக்கானி ரயில்வே பாலம், காளீஸ்வரா மில் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆவராம்பாளையம் ரயில்வே பாலம் மற்றும் பீளமேடு நவ இந்தியா சிக்னல் அருகே ஆகிய இடங்களை, கண்காணித்து ஒழுங்குப்படுத்த, அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் மண்டல சுகாதார அலுவலர்கள், இளம் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் மழை நீர் அகற்றும் வாகனங்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக் கின்றன.பொதுமக்கள் பாதிக்காத வகையில், துரிதமாக செயல்பட வேண்டும். தேவையான வாகனங்கள், பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பணிகளில் காலதாமதம் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறுகையில், ”உக்கடம் குளத்துக்கு வரும் சேத்துமா வாய்க்கால் மற்றும் சிங்காநல்லுார் குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்கால் துார்வாரப்படுகிறது. வாலாங்குளத்தில் உபரி நீர் செல்லும் வடிகால் புதுப்பித்துக் கட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது வாய்க்காலை துார்வார அறிவுறுத்தி உள்ளோம்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.