கோவை வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பாக, டில்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கர் பரப்பில் கொட்டப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாலும், நீலத்தடி நீர் மட்டம் பாழானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்றக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசாரணையின்போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர், நேரில் ஆய்வு செய்தபோது, குப்பை பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார். அப்போது, ‘பயோமைனிங்’ முறையில் பழைய குப்பை அழிக்கப்படும். நகர் பகுதியில் ஆங்காங்கே ‘மைக்ரோ குப்பை மையம்’ ஏற்படுத்தி, உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படும். வெள்ளலுாருக்கு குப்பை கொண்டு செல்ல மாட்டோம் என, மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், ‘பயோமைனிங்’ முறையில் மட்டும் பழைய குப்பை அழிக்கப்படுகிறது. ‘மைக்ரோ சென்டர்’ உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், மாநகராட்சி போதிய அக்கறை காட்டாததால், வெள்ளலுாருக்கு குப்பை கொண்டு வருவது தொடர்கிறது. அதனால், டில்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஈஸ்வரன், மாநகராட்சி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ”ஓராண்டுக்குள் பழைய குப்பை அழிக்கப்படும்; நான்கு மாதங்களுக்குள், 65 இடங்களில் ‘மைக்ரோ’ அளவில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கப்படும் என மாநகராட்சி கூறியது. பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி உறுதியளித்தபடி செயல்படவில்லை. இன்னமும் வெள்ளலுார் கிடங்கிற்கே குப்பை கொண்டு வரப்படுகிறது. அதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.