பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தின் மிகப்பெரிய அணையான பரம்பிக்குளம் அணையின் மூன்று மதகுகளில் நடுமதகு கடந்த செவ்வாய்க்கிழமை (20-09-2022) இரவு சுமார் 1.15 மணிக்கு அளவில் உடைப்பு ஏற்பட்டு பாசனத்திற்காக கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தேக்கி வைக்கப்பட்ட 6 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இதன் உண்மை நிலை அறிய நேற்று(22.09.2022) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச்செயலாளர் – சு. முத்து விசுவநாதன், பிஏபி விவசாயிகள் நல சங்கத்தின் செயலாளர் – விவேகானந்தன், மற்றும் சங்க உறுப்பினர் வரதராஜ்,பாபு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் – மந்த்ராச்சலம், ஒருங்கிணைப்பாளர் ஓராட்டுககுப்பை விஸ்வநாதன் ஆகியோர் உண்மை அறியும் பயணத்தில் கலந்து கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீர்வள ஆதாரத்துறையில் உரிய முன் அனுமதி பெற்று பரம்பிக்குளம் அணைக்கு சென்றடைந்தோம். உடைப்பு ஏற்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்த போது தெரியவந்த விபரம் என்னவென்றால், அணையின் மதகை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் சங்கிலியின் ஆயுட்காலம் காலாவதியாகி விட்டதால் பலம் இழந்து அறுந்து விழுந்ததால் மதகின் மறுமுனையில் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் முப்பது டன் எடை கொண்ட கான்கிரீட் எடைக்கல் மறு புறமாக இருந்து கீழே விழும்போது அணையின் மதகை பலமாக தாக்கியதால் அணையின் மதகு ஒரு புறமாக திரும்பி பெரும் சத்தத்துடன் அணையிலிருந்து கீழே விழுந்து உள்ளது.
இதனால் பாசன நீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மீதம் இருக்கும் இரண்டு மதகுகளிலும் பலமிழந்து துருப்பிடித்து உள்ளது. தூணக்கடவு அணையின் மதகுகளிலும் துருப்பிடித்து ஓட்டை விழுந்து ஆங்காங்கே சிறிய அளவில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பொதுவாக அணையின் மதகு மற்றும் அதனுடன் இணைந்த சங்கிலி ஆகியவற்றிற்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என உலக வங்கி தெளிவாக தெரிவிக்கிறது.
ஆனால் பரம்பிக்குளம் அணையின் மதகு மற்றும் சங்கிலி 60 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை முறை பராமரிப்பு செய்தாலும், காலம் கடந்து அதிக காலத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்பட்ட பலவீனமே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கிறது. அணை கட்டப்பட்ட பின்பு, மதகும் சங்கிலியும் பராமரிப்பு மட்டும் செய்யப்பட்டதே தவிர, காலம் கடந்தும் மாற்றப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
பரம்பிக்குளம் அணையில் மட்டுமல்ல, பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நிலைமை இதுதான், தமிழக முழுவதும் (முல்லைப் – பெரியாறு தவிர) அணைகளை பொருத்தவரை இதே நிலைமைதான் உள்ளது. எனவேதான் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அணை, முக்கொம்பு அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணை ஆகியவற்றின் மதகுகள் சேதம் அடைந்து நீர் வெளியேறியுள்ளது.
இதற்கு மேற்கொண்டும் நீர்வள ஆதாரத்துறை போர்க்கால அடிப்படையில் தமிழ்நாட்டில் இயக்கத்தில் உள்ள அனைத்து அணைகளில் 40 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணைகளின் மதகு மற்றும் சங்கிலிகளை மாற்றாமல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விபத்துக்கள் தொடர்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்பு என்பது சாதாரணமானதல்ல, இந்த நீரின் அவசியம் எவ்வளவு பெரியது, எவ்வளவு அதி தீவிரமானது என்பது பிஏபி விவசாயிகளுக்கு மட்டுமே புரியும். உண்மையை பதிவிட வேண்டும் என்றால் அணையின் மதகு உடைந்து வெளியேறிக் கொண்டிருப்பது பாசன நீர் அல்ல, பிஏபி விவசாயிகளின் கண்ணீர்.
ஒன்பது சுற்று வர வேண்டிய தண்ணீர் நான்கு சுற்று ஆகிவிட்டது, கடைமடை விவசாயிகள் உரிய உரிமை நீரை கேட்டு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், தலைமடை விவசாயிகளுக்கும் அதே நிலைமைதான். இன்னொரு புறம் இது போன்ற மாபெரும் சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அடர்ந்த வனப் பகுதிக்குள் 9 அணைகளை கட்டி தொழில்நுட்பம் வளராத காலத்தில் இவ்வளவு பெரிய கட்டுமானம் நடந்திருக்கிறது என்பதை படித்து மட்டுமே அறிந்திருந்தோம், நேற்று நேரில் பார்த்தபோது உண்மையில் இது ஆசியாவின் பொறியியல் அதிசயம் அல்ல இது இந்த உலகின் பொறியியல் அதிசயமாக என்று நாங்கள் உணர்ந்தோம்.
இந்த திட்டத்தை நமக்கு தந்த கர்மவீரர் காமராஜர், பாரத ரத்னா சி சுப்பிரமணியம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் தந்தை வேட்டைக்காரன்புதூர் பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரோடு, திட்டப்பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரையும் நாம் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது.
இறுதியாக திரும்பும் போது தலைமை பொறியாளர் உயர்திரு. முத்துசாமி , மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை சந்தித்து பிரச்சனையின் தீவிரத்தையும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வலியுறுத்திவிட்டு வந்தோம்.
-அலாவுதீன், ஆனைமலை.