சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்கள் சூழ நாதியற்று கிடக்கிறது சங்கரபதி கோட்டை. 16ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதிக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது, சங்கரபதி கோட்டை. இக்கோட்டை இந்தோ – இஸ்லாமிய கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொண்டியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், மன்னர் சேதுபதிக்கு 200 குதிரைகளைப் பரிசளித்தார். அந்தக் குதிரைகளைப் பராமரிக்க, திறமையான ஆள் தேடினார் சேதுபதி. அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் திறமையான குதிரைப் படைகளை வைத்திருந்தவர்கள் இஸ்லாமிய மன்னர்கள்தான். அதே காலகட்டத்தில் மைசூரை ஆண்ட ஹைதர் அலிக்கும், அவரது மகன் திப்பு சுல்தானுக்கும் சிவகங்கை சமஸ்தானத்தோடு நெருக்கமான தொடர்பிருந்தது.
எனவே மன்னர் சேதுபதி, இந்தக் குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலியிடம் உதவிக்கு ஆள் கேட்டார். ஹைதர் அலி, சங்கரபதி என்ற தனது தளபதியையே மன்னர் சேதுபதியின் வேண்டுகோளுக்கிணங்க அனுப்பி வைத்தார். (இவரது பெயரிலேயே இந்தக் கோட்டை அழைக்கப்படுகிறது) சங்கரபதி, தீரமிக்க மனிதர். யானைப்படை, குதிரைப்படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் தேர்ச்சி பெற்றவர். உருது மற்றும் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்த சங்கரபதி, இந்தக் கோட்டையில் தங்கியிருந்து குதிரைகளுக்கு போர்ப்பயிற்சி அளித்தார்.
மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான வேலுநாச்சியாருக்கு அனைத்து விதமான போர் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து, சிவகங்கை சமஸ்தான மன்னர் முத்துவடுகநாதருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். தனது விருப்பத்துக்குரிய சங்கரபதியைக் கோட்டையை மகளுக்கு சீதனமாகக் கொடுத்தார். வேலுநாச்சியாரின் படைத் தளபதிகளாக சின்னமருதுவும், பெரியமருதுவும் இருந்தார்கள்.
வேலு நாச்சியாரின் கணவரான மன்னர் முத்து வடுகநாதரை ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து கொன்று, சிவகங்கையைக் கைப்பற்றினர். வேலுநாச்சியார், தனது தலைமை தளபதி தாண்டவராயன் பிள்ளை, மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் வெள்ளையர்களுக்கு அடிபணியாத மைசூரு மன்னர் ஹைதர் அலியின் உதவியுடன் 1780ல் சிவகங்கை சீமையை மீட்டு ஆங்கிலேயர்களைப் பழிதீர்த்தார்.
அந்தப் போருக்காக, வேலுநாச்சியாரின் படையும், திப்பு சுல்தானின் படையும் போர்ப்பயிற்சி பெற்றது, சங்கரபதி கோட்டையில்தான். மருது சகோதரர்களும் அவரது படை வீரர்களும் பூமராங் வடிவ ஆயுதமான வளரியை வீசும் கலையில் வல்லுனர்களாக இருந்தனர். மருது சகோதரர்கள் தங்களின் படை வீரர்களுக்கு சங்கரபதி கோட்டையில்தான் வளரி எறிதல் பயிற்சி அளித்தனர். (1801ல் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட உடனேயே, வளரி பயன்பாட்டை ஆங்கிலேயர்கள் தடைசெய்தனர்).
இந்தக் கோட்டையிலிருந்து காளையார் கோவில் பகுதியில் உள்ள காளீஸ்வரர் கோயில், திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்கு சுரங்கப்பாதைகள் இருந்துள்ளன.
1800, 1801ல் மதுரையிலிருந்து திருப்புத்துார் வழியாகவும், தஞ்சாவூரிலிருந்து காரைக்குடி, காளையார்கோவில் வழியாகவும் ஆங்கிலேயர்கள் படை நடத்தி சிவகங்கையை தாக்கினர். ஆங்கிலேய தளபதி மேக்கிலின் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் தஞ்சாவூரிலிருந்து காரைக்குடி வழியாக வரும்போது சங்கரபதிகோட்டையில் இருந்த படைவீரர்களை தாக்கினர். அப்போது சங்கரபதி கோட்டை குண்டுகளால் துளைக்கப்பட்டது.
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை காட்டுக்குள் புதைந்து கிடந்தது. வனத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தக் கோட்டையை மீட்டு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜ்குமார் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அறிவித்தார். ஆனால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
மேலும், சங்கரபதி கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110ஆவது விதியின் கீழ் சங்கரபதி கோட்டையை சுற்றுலாத்தலமாக அறிவித்து, கோட்டையை புனரமைக்க 3 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். அந்த அறிவிப்பு அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.
ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கோட்டையின் வெளிவராத பெருமைகளை வெளி உலகம் அறிந்திட தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வார் என வரலாற்று ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வெள்ளையர்களுக்கெதிராக வீரமங்கை வேலு நாச்சியார், திப்பு சுல்தான் மற்றும் மருது சகோதரர்கள் ஓரணியில் நின்று, தீரமுடன் போரிட்ட நிகழ்வுகளின் வரலாறுக்கு சாட்சியாய் சிதிலமடைந்த நிலையில் நிற்கும் சங்கரபதி கோட்டையை புனரமைத்துப் பாதுகாத்து, காட்சிப்படுத்தினால் எதிர்கால சந்ததியினர் சிவகங்கைச் சீமை தமிழர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவில் கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ள நிலையில் அதற்கு தற்போதைய தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
– பாரூக் & ராயல் ஹமீது.