வட இந்தியாவில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை சகோதர பாசத்தோடு வலுப்படுத்தி வருகிறார்கள் இந்துக்களும், இஸ்லாமியர்களும். இதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகள் நடந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பட்டவைய்யனார், கருப்பர், கொம்புக்காரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கருங்கல்லால் ஆலயம் எழுப்பப்பட்டு குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டதும் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அழைப்புக் கொடுத்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
யாகசாலை பூஜைகள் தொடங்கியது. புனித நீர் எடுத்துவரும் நேற்றைய நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். இன்று திங்கள்கிழமை குடமுழுக்கு நடக்கும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சீர் கொண்டு செல்லும் நிகழ்வு நடந்தது.
கீரமங்கலம் மேற்கு பேட்டை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத்தார்கள் தேங்காய், காய், கனி, பூ, வெற்றிலை பாக்கு, பணம் வைத்து 21 தட்டுகளுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் விண்ணதிரும் வானவேடிக்கைகளுடன் பட்டவையனார் கோவிலுக்கு
சுமார் 3 கி.மீ. தூரம் நடந்தே ஊர்வலமாகச் சென்றனர்.
முஸ்லிம் ஜமாத்தார்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் என விழாக்குழுவினர், கோவில் வளாகத்தில் செண்டை மேளம் முழங்க இருகரம் கூப்பி வரவேற்றதுடன் மாலை அணிவித்து சந்தனம், பூ, கற்கண்டு கொடுத்து வரவேற்று கோவில் கல் மண்டபத்தில் அமர வைத்தனர். சீரோடு கொண்டுவந்த பணத்தை விழாக்குழுவினரிடம் ஜமாத்தார்கள் வழங்கினார்கள்.
இதேபோல காசிம்புதுப்பேட்டை முஸ்லிம் ஜமாத்தார்களும் சீர் கொண்டு வந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ‘தமிழகம் முழுவதுமே இந்துக்களும் இஸ்லாமியர்களும் எப்போதுமே சகோதர பாசத்துடன்தான் வாழ்கிறோம். கீரமங்கலம் பகுதி கிராமங்களில் எங்கள் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கிராமத்தினர் கலந்து கொள்வதும், இந்துக்களின் கோவில் நிகழ்வுகளில் ஜமாத்தார்கள் கலந்து கொள்வதும் பலதலைமுறைகளாக வழக்கமாக உள்ளது.
அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான் உறவில்தான் இப்போதும் இருக்கிறோம். இதயப்பூர்வமான உண்மையான மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறோம். தொன்றுதொட்டு வரும் இந்த வழக்கம் இன்னும் பல தலைமுறைகளுக்கு வாழும். இன்று எங்களை வரவேற்றவிதம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. உறவுகளை வரவேற்பதை பார்க்கிறோம்’ என்றனர் நெகிழ்ச்சியாக.
இதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது கேசராபட்டியை சேர்ந்த இந்துக்கள் பிடாரியம்மன் ஆலயத்திலிருந்து பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக எடுத்துச் சென்றனர்.
அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்று சீர்களை பெற்றுக் கொண்டு மதநல்லிணக்கத்திற்காக சிறப்புத் தொழுகையும் நடத்தி அவர்களை நெகிழச் செய்தனர். தமிழ்நாட்டில் மக்களிடையே மதங்களை கூறி பிரிவினையை ஏற்படுத்த இயலாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்றாக உள்ளன.
– பாரூக், சிவகங்கை.