சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியையும், ஒரு ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியை தொடர்ந்து விடுமுறை எடுத்து வரும் நிலையில், மற்ற இரு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, வட்டார கல்வி அலுவலர்கள் இந்திரா தேவி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் ஒடுவன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் 2 ஆசிரியர்களிடமும், அவர்கள் தற்காலிகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலறிந்து, பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள், ‘இரு ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளின் கல்வித்தரத்தை வெகுவாக மேம்படுத்தியுள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆசிரியர்கள் இருவரின் மீதும் பொய்யான காரணங்களைக் கூறி பள்ளியின் தலைமை ஆசிரியையும், ஊராட்சி மன்றத்தலைவரும் பணியிட மாறுதல் செய்யப் பரிந்துரைத்துள்ளனர். அவர்கள் இருவரும் இங்கிருந்து மாற்றப்பட்டால் எங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் நிச்சயம் பாதிக்கப்படும்.
எனவே, அவர்கள் இருவரின் தற்காலிக பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும். எங்கள் வேண்டுகோளையும் மீறி அவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அணுப்ப மாட்டோம்’ எனக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சிங்கம்புணரி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜானகிராமன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
மேலும் ஆசிரியர்களின் பணியிடமாற்றத்தை ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர்கள் கையொப்பமிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.