செங்கல் சூளைகளால் ரூ.2,273 கோடிக்கு மண் கொள்ளை நடந்திருப்பதையும், ரூ. 399 கோடிக்கு சூழலியல் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் மறைத்து, கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தடாகம் பள்ளத்தாக்கில் நடந்த மண் கொள்ளை, சூழலியல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கோவை கலெக்டர் தலைமையில், கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை 20ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஐந்து கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி நடந்து வந்த 177 செங்கல் சூளைகளால் ரூ.373 கோடியே 74 லட்சம் மதிப்புக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணிப்புப்படி, ரூ.66 கோடியே 88 லட்சத்துக்கு, சூழலியல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு இழப்பீடாக, செங்கல் சூளைகளிடம் இருந்து ரூ.59 கோடியே 32 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே தங்களை இணைத்துக் கொண்ட ராஜேந்திரன் உட்பட மூன்று பேர் சார்பில், கூட்டுக்குழுவின் அறிக்கை மீது ஆட்சேபம் தெரிவித்து, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 256 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில், கூட்டுக்குழு அறிக்கையில் பல்வேறு தகவல்களும், உண்மைகளும் மறைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை ஓடைகளை செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தும் பாதையாக மாற்றியது, யானைகளின் வழித்தடத்தை மறித்தது, யானை-மனித மோதலால் ஏற்பட்ட பாதிப்புகள், முக்கிய அரசியல் பிரமுகர்களின் நிலங்களிலும், செங்கல் சூளைகளாலும் நடந்த மண் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சுட்டிக்காட்ட கூட்டுக்குழு அறிக்கை தவறி விட்டதாக, அதில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
கூட்டுக்குழு சார்பில் 565 குவாரிகளில், கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மனுதாரர்களின் சார்பில், இந்த 565 உட்பட 706 குவாரிகளில் கள ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் நடந்த மண் கொள்ளை அளவு மற்றும் தொகையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, கூட்டுக்குழு அறிக்கையில் தெரிவித்ததை விட, ரூ.1849 கோடிக்கு கனிம வளக் கொள்ளை நடந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
ஏற்கனவே கூட்டுக்குழு குறிப்பிட்டுள்ள ரூ.373 கோடியையும் சேர்த்து, மொத்தம் ரூ.2273 கோடிக்கு, மண் கொள்ளை நடந்திருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு குவாரிகள் விடுபட்டுள்ளன என்பதற்கான பட்டியலையும் மனுதாரர்கள் இணைத்துள்ளனர்.
செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகளை, 514 நாட்களுக்கு மட்டுமே வாரியம் கணக்கிட்டுள்ளது; ஆனால் மொத்தம் 3457 நாட்களுக்குக் கணக்கிட வேண்டுமென்று சுட்டிக்காட்டியுள்ள இந்த மனு, அந்த வகையில் ரூ.399 கோடியே 72 லட்சம் அளவுக்கு, சூழலியல் இழப்பீடாக வசூலிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
மனுவின் சாராம்சத்தை 38 பக்கங்களில் விளக்கியுள்ள மனுதாரர்கள், அதற்கு ஆதாரமாக 200க்கும் அதிகமான பக்கங்களுக்கு ஆவணங்களை இணைத்துள்ளனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் எந்த விதமான உத்தரவை பிறப்பிக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.