நேற்றைய தினம் 20 செப்டம்பர் அன்று தனியார் வங்கி கடன் தர மறுத்ததால் திருவாரூரில் துறவி ஒருவர் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்கப் போவதாக மிரட்டினார். அது மட்டுமின்றி அவர் தனது பேஸ்புக் கணக்கில் இருந்து லைவ்ஸ்ட்ரீம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி கிராமத்தில் ‘இடி மின்னல்’ சங்கமம் நடத்தி வருபவர் துறவி திருமலை சாமி. சீனாவில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வரும் தனது மகளுக்கு கடன் கேட்டு தனியார் துறை வங்கியை அணுகினார் திருமலை சாமி.
வங்கி அதிகாரிகள் சொத்து ஆவணங்களை அடமானமாக கேட்டதாகவும், அதற்கு சாமி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால், தனது சொத்தை ஏன் வங்கி பிணையாகக் கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இறுதியில் வங்கி அதிகாரிகள் அவரது கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். நடந்ததை நினைத்து கோபமுற்ற சாமி வீட்டுக்குச் சென்று துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வங்கிக்குத் திரும்பியுள்ளார்.
வங்கியில் நுழைந்த சாமி அமர்ந்து புகைபிடிக்க ஆரம்பித்தார். பிறகு அங்கிருந்த வங்கி ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தார். தனது முகநூல் பக்கத்தில் தனது செயல்களை லைவ் ஸ்ட்ரீம் செய்யும் போது, கடன் தர மறுத்ததற்காக வங்கியைக் கொள்ளையடிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் வங்கிக்கு சென்று துறவி திருமலை சாமியை கைது செய்தனர். தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
– ஹரி சங்கர், கோவை வடக்கு.