கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் பத்திரிகையின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத் ஆகியோர் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் கிராமத்தில் இயங்கி வருகிறது சக்தி தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவியின் பெற்றோரளித்த புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர். அதன்பின்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளி மானவியின் மர்ம மரணம் குறித்து நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து புலனாய்வு செய்து வருகிறது. நக்கீரன் செய்தியாளர்கள் பலமுறை கள்ளக்குறிச்சிக்கே நேரடியாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், கனியாமூர் பள்ளியை சீரமைக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு அதன்படி பணிகள் துவங்கியது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க செப்டம்பர் 19 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணியளவில் கனியாமூர் வந்த நக்கீரன் பத்திரிகையின் தலைமை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்(56), புகைப்படக் கலைஞர் அஜீத்குமார்(26) ஆகியோர் பள்ளி அருகே வெளிப்புறத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்தவாறே சீரமைப்புப் பணிகள் நடைபெறும் பள்ளியின் வெளிப்புறத்தை படம்பிடித்துள்ளனர்.
பின்னர், பள்ளியிலிருந்து கிளம்பி சுமார் 100 மீட்டர் தொலைவில் போய்க்கொண்டிருந்த போது, 5 இருசக்கர வாகனங்களில் வந்த சில குண்டர்கள், செய்தியாளர் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத் ஆகியோரது காரை வழிமறித்துத் தாக்கி, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
அங்கிருந்து செய்தியாளர் தாமோதரன் பிரகாசை கடத்திச்செல்ல முயன்றுள்ளனர்.
உடனடியாக காரை பின்புறமாக செலுத்தி தப்பிய இருவரும் 15 கிலோ மீட்டர் கடந்து, தலைவாசல் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஓய்வெடுப்பதற்காக வெளியே வந்துள்ளனர். அங்கு வரை பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட சமூக விரோத கும்பல்,
காரைச் சூழ்ந்துகொண்டு தாக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது செய்தியாளர் பிரகாஷின் தலை உடைக்கப்பட்டு, அஜீத்தின் பல் நொறுக்கப்பட்டது. ரத்தக் காயத்தோடு நின்று கொண்டிருந்த அவர்களைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக அவர்களை அருகிலிருந்த தலைவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். செய்தியாளர் பிரகாஷிடம் இருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கணியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமாரின் தம்பி அருள்சுபாஷ், மோகன், ராஜசேகர் உள்பட 10 பேர் மீது கொலை முயற்சி உள்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சின்னசேலத்தை சேர்ந்த செல்வராஜ் (35), தீபன்சக்கரவர்த்தி (36), செல்வக்குமார் (38), பாலகிருஷ்ணன்(45), ராஜசேகர்(44) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்னர்.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்கள் தங்கள் பணிகளை எந்த அச்சமும், இடையூறுமின்றி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
– பாரூக், சிவகங்கை.