சிங்கம்புணரியில் உள்ள பெரியாறு நீட்டிப்பு கால்வாய் கரையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு கால்வாய் கரையில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய வாலிபர், கால்வாயில் விழுந்து பலியான சம்பவத்தை கடந்த அக்டோபர் 26 அன்று செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
(https://nalaiyavaralaru.com/2022/10/சிங்கம்புணரியில்-வாகனத்/)
இந்நிலையில், சிங்கம்புணரி மேலத்தெருவைச் சேர்ந்த சின்னையா மகன் மூக்கன்(67) என்பவர் இரு தினங்கள் முன்பு இரவு அதே டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு வந்து போதையின் காரணமாக கால்வாய் கரையில் படுத்திருந்திருக்கிறார்.
அதன் பின்பு அவர் கால்வாய்க்குள் உருண்டு விழுந்ததில் கால்வாயில் இருந்த நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிங்கம்புணரி நகர எல்லையில் இரண்டு மதுபான கடைகள் பெரியாறு நீட்டிப்பு கால்வாயின் கரையிலேயே அமைந்துள்ளன. அங்கு அமர்ந்து மது அருந்தி விட்டு கிளம்பும் குடிமகன்கள், கால்வாயின் கரையில் போதுமான தடுப்புகள் இல்லாத காரணத்தால் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாவது, உயிர் பலியாவது தொடர்கதையாகி உள்ளது.
கடந்த 10 நாட்களுக்குள் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனித உயிர்களின் மீது மதிப்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவார்கள் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.