மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி பெரியகற்பூரம்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் ஊரக வளர்ச்சி மற்று உள்ளாட்சி இயக்கம் சார்பாக அனுப்பட்ட கூட்டப்பொருள் (அஜென்டா) பற்றி கிராமசபையில் விவாதிக்கப்பட்டது.
அதன்பின்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பொதுநிதி கணக்கு செலவீனம், கடந்த நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, படிவம் 30 கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரதம் இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட கூட்டப்பொருள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
மகளிர் திட்டம், பஞ்சாயத்து கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளிட்ட சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக விளக்கப்படது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் பயனாளிகளுக்கு 100 வேலை நாட்களோடு முழு சம்பளம் பெறும் வண்ணமாக Labour Budget எனப்படும் தொழிலாளர் வரவு – செலவு அறிக்கையை ஊராட்சி நிர்வாகமே தயாரித்து அளிப்பதன் அவசியத்தை இளைஞர்கள் முன் வைத்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை முன்போல இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடியில் பகலில் மட்டும் சேவையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இரவிலும் இயங்கிட செய்ய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுப்பது, நியாய விலைக்கடைகளில் சோப், டீத்தூள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிட கட்டாயப்படுத்துவது, சொந்த நிலம் இல்லாமல் பாறைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குதல், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பட்டியலில் இடம்பெற்று இதுவரை வீடு வழங்கப்படாத அனைவருக்கும் உடனடியாக வீடு கட்ட அனுமதிப்பது,
கோவில்பட்டியில் புதிய சுடுகாடு அமைப்பது தொடர்பாக தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அவை ஊராட்சி தீர்மானங்களில் இணைக்கப்பட்டன.
சின்னக்கற்பூரம்பட்டியில் வாக்குச்சாவடி அமைப்பது, பூலாங்குடி கண்மாய் மறுகால் சீரமைப்பு,
பெரியகற்பூரம்பட்டி ஆண்டிக்கோயில் வரை உள்ள ஓடையை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும், தூய்மை பாரத இயக்கம் மூலமாக கழிப்பறை கட்டுவது நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டி பயன்பெற விரும்புவோர் புதிதாக மனு அளிக்க வலியுறுத்தப்பட்டது.
குடிசை வீடுகளில் வாழும் 24 குடும்பங்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலமாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் தரப்பட்டது. கழிப்பறை கட்ட இடம் இல்லாதவர்கள் பயன்பெறும் வண்ணம் பொதுக் கழிப்பறைகள் கட்டப்படுதல்,
குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்யவது, கண்மாய் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுவது, கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அடுத்தடுத்து நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் விளக்குவது, கிராமசபையில் வரவு செலவு அறிக்கை வாசிப்பதோடு செலவின ரசீசுகளையும் கிராம சபையில் பார்வைக்கு வைப்பது, 100 நாள் திட்ட பணிகள் மற்றும் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் வேலை தொடர்பான முழு அறிக்கையும் கிராமசபைக்கு அளிப்பது தொடர்பாக பேசப்பட்டது.
ஊராட்சியில் வறுமை கோடு பட்டியலில் 567 பேர் இடம் பெற்றுள்ளனர் என்றும், புதிதாக வறுமை கோடு பட்டியலில் சேர விரும்புவோர் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிற்கு கோரிக்கை மனு அளிக்கவும் வலியுத்தப்பட்டது.
ஊராட்சி வருமானத்தை பெருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, கூடுதல் நிதி தேவைகளை திரட்டும் வழிகள் பற்றி கூட்டத்தில் இளைஞர்கள் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது. கம்பூர், அலங்கம்பட்டி குடிநீர் மேல்நிலைத் தேக்கத்தொட்டிகளை இடித்து விட்டு அதனை புதிதாக கட்டித் தராவிட்டால் போராட்டம் நடத்திட வேண்டிய சூழல் உருவாகும் என்பதையும் இளைஞர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.
மொத்தத்தில் இன்று கம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபையில் அரசு வழங்கிய கூட்டப்பொருள் முழுமையாக விவாதிக்கப்பட்டதோடு ஊராட்சி முன்னேற்றம், கிராமசபையின் பரிணாமம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் விரிவாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முன் தயாரிப்போடு வந்து நல்ல விவாதங்கள் ஏற்படும் வகையில் கேள்விகளை எழுப்பினர்.
இந்த கிராம சபை கூட்டத்திற்கு கம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து ஜெகதீசன் பார்வையாளராக கலந்து கொண்டார்.
கிராம நிர்வாக அலுவலர் ராமர், தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார், சீனிவாசன், இந்திராகாந்தி, சாந்தி, உமா மகேஸ்வரி, லெட்சுமி, மகளிர் திட்டம் தேன்மொழி, சுகாதார பணியாளர் சர்மிளா பானு, ஊராட்சி துணைத்தலைவர் நிலா கார்த்திக், ஊராட்சி பிரதிநிதிகள் சித்ரா, அடைக்கன், கண்ணதாசன், சுதா, பாண்டியம்மாள் மற்றும் கருப்பையா உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஊராட்சிச் செயலாளர் ரூபா நன்றி கூறினார்.
– மதுரை வெண்புலி.