கோவையில் தீபாவளி பர்ச்சேஸ் களைகட்டியுள்ளது. கடைவீதிகளில் விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை விட, அதிக மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. ஓட்டல்கள், செருப்புக்கடைகள், பேன்சி ஸ்டோர்கள், உள்ளாடை கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வாகன ஷோரூம்களும் விதிவிலக்கில்லை. இதனால், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனாவால் முடங்கிய மக்கள், ஜீவனில்லாத தீபாவளியைத்தான் கொண்டாடினர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதால், பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், மக்களிடம் மீண்டும் களைகட்ட துவங்கியுள்ளன. தீபாவளி பண்டிகையை ஒரு கை பார்த்து விடுவது என, வரிந்து கட்டிக் கொண்டு பொதுமக்கள் தங்களது ‘பர்ச்சேஸை’ துவங்கியுள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வழக்கமாக நவ., மாத துவக்கத்தில் வரும் தீபாவளிப் பண்டிகை, இந்தாண்டு அக்., இறுதியில் வருகிறது. சம்பளம் வாங்கியவுடன், பொதுமக்கள் ‘பர்ச்சேஸ்’ பணிகளை துவங்கி விட்டனர். இதனால், கோவையின் முக்கிய வீதிகளான, கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், 100 அடி ரோடு என, பல்வேறு பகுதிகளிலும், இம்மாத துவக்கத்தில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதைத் தவிர புறநகர் பகுதிகளிலும் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வருகின்றன.
ஜவுளி, நகைக்கடைகளில், கூட்டம் நிரம்பி வழிகிறது. டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள், இருசக்கரம், கார் ஷோரூம்களிலும் சலுகைகளை வாரி வழங்குவதால், அங்கும் வாடிக்கையாளர்களை அதிகளவில் காண முடிகிறது.
ஆடைக்கு மேட்ச் ஆக செருப்பு, ஷூக்களும் முக்கியம் என்பதால், இது போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டம் அள்ளுகிறது. எல்லாவற்றையும் விட பேன்சி கடைகள், பிளவுஸ் ஸ்டிச்சிங் கடைகளை பெண்கள் மொய்த்துத் தள்ளுகின்றனர்.
இதற்கிடையே, அடுத்த மாதம் திருமண முகூர்த்த நாட்கள் வருவதால், கல்யாண ஜவுளி வாங்கவும் மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்பவர்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், ஜூஸ் கடைகளில் ‘எனர்ஜி’ ஏற்றிக்கொண்டு, மீண்டும் ஒரு ரவுண்டு வருகின்றனர்.
பெரிய கடைகளில் இப்படியென்றால், இளைஞர்கள், கல்லுாரி மாணவியர் பலரின் தேர்வு, மால்களாகதான் உள்ளது. பொதுவாக நிறுவனங்கள், பண்டிகைக்கு ஒரு வார காலத்துக்கு முன்னரே, போனஸ் வழங்கும் நடைமுறை இன்றும் பின்பற்றப்படுகிறது. இதனால், தீபாவளிக்கு ஒருவாரத்துக்கு முன், தீபாவளி பர்ச்சேஸ் இன்னும் அதிகளவில் களைகட்டும் என்பது உறுதி.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.