சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, உயிர் அமைப்பு சார்பில், ‘குட்டி காவலர்’ திட்டம், கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது; ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.கோவையில், வாகன பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சாலை விதிமீறலால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும்போது, வாகன ஓட்டிகள் பொருட்படுத்திக் கொள்ளாமல், கடந்து செல்கின்றனர். அதனால், குழந்தைகள் மூலமாக பெற்றோருக்கு சேர்ப்பிக்கும் வகையில், உயிர் அமைப்பு மூலமாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி திட்டம் உருவாக்கப் பட்டிருக்கிறது. மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும், மாணவ – மாணவியருக்கு இப்பாட திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டம், ஆறு முதல் எட்டு வரை ஒரு பாடத்திட்டம் என இரு பிரிவாக பிரித்து, தயாரிக்கப் பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு, ‘குட்டி காவலர்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வரும், 12ல் சென்னையில் இருந்து ‘வீடியா கான்பரன்ஸ்’ முறையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். திட்டம் தொடர்பாக இரு மாணவர்கள், அவர் முன்னிலையில் பேச இருக்கின்றனர்.
ஆசிரியர் வழிகாட்டி நுால் மற்றும் மாணவர் பயிற்சி கையேடு தமிழ் பதிப்பை, முதல்வர் வெளியிட இருக்கிறார்.இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். உயிர் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உயிர் அமைப்பினர் கூறியதாவது: சாலை விழிப்புணர்வை பாடத்திட்டமாக, குழந்தைகளிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். இதற்கென கையேடு உருவாக்கப் பட்டிருக்கிறது. சாலை என்றால் என்ன; சாலையில் எப்படி பயணிக்க வேண்டும்; விதிமுறைகள் என்ன; ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டியதன் அவசியம் என்ன என்பது தொடர்பாக, கற்றுக் கொடுக்கப்படும்.
அவர்கள் மூலமாக, ஹெல்மெட், சீல் பெல்ட் அணிவதன் அவசியத்தை பெற்றோரிடம் தெரிவிக்க வலியுறுத்தப்படும். உணர்வுபூர்வமாக அணுகப் போகிறோம். இனி, ‘வீட்டுக்கொரு குட்டி காவலர்’ இருப்பார்கள்.
அவர்கள், சாலை பாதுகாப்பை முழுமையாக அறிந்திருக்கும்போது, எதிர்காலத்தில் விபத்துகள், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். பெற்றோர் அலட்சியமாக செயல்படாமல், அவர்களால் தடுக்க முடியும்.இத்திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்ததும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவ மாணவியருக்கு சாலை பாதுகாப்பு பாடத்திட்டம் கற்பிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.