கோவை-ஆனைகட்டி ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி இன்னும் முடிவடையாததால், டெண்டர் விட்டு, ஆறு மாதமாகியும், சீரமைப்பு பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை துவக்காமல் இருக்கிறது.
கோவை நகரில் உள்ள ரோடுகளில், தடாகம் ரோடு மிக முக்கியமானது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கான வழித்தடமாக இருப்பதுடன், சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், கோவில்மேடு, கணுவாய், ஆனைகட்டி போன்ற குடியிருப்புப் பகுதிகளுக்கும் பிரதான வழியாக உள்ளது. நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ரோடுகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால், ஆறு வழிச்சாலையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், கோவை நகரில் படுமோசமாக உள்ள, 16 ரோடுகளை, ரூ.140 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒன்றாக, தடாகம் ரோட்டில்,அரசினர் பொறியியல் கல்லுாரியில் இருந்து கே.என்.ஜி. புதுார் பிரிவு வரையுள்ள, 5.25 கி.மீ., துாரமுள்ள ரோடு, ரூ.31 கோடியே, 25 லட்சம் மதிப்பில், நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. தற்போது ஏழு மீட்டர் அகலமுள்ள ரோடு, 15.6 மீட்டர் அளவுக்கு சென்டர் மீடியன் மற்றும் மழைநீர் வடிகாலுடன் விரிவாக்கம் செய்யப்படும்.
இதற்கு, கடந்த ஏப்ரலிலேயே டெண்டர் விடப்பட்டு, ஒர்க் ஆர்டரும் வழங்கப்பட்டு விட்டது; இப்போது வரை சீரமைப்பு பணி துவங்கவேயில்லை. கடந்த சில நாட்களாக, டி.வி.எஸ்., நகர் அருகில், மழைநீர் வடிகால் கட்டும் பணி மட்டும் துவங்கி, நடந்து வருகிறது. இந்த ரோட்டில், பில்லுார் மூன்றாவது குடிநீர்த் திட்ட பணிகள் நடந்து வருவதே, சாலை பணி துவங்காமல் தாமதமாவதற்குக் காரணமாக உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இத்திட்டத்தில், பன்னிமடையில் இருந்து குறிச்சி, குனியமுத்துார், பிள்ளையார்புரம், சாய்பாபா காலனி மற்றும் விளாங்குறிச்சிக்கு, குழாய்கள் இவ்வழியே கொண்டு செல்லப்படுகின்றன. குடிநீர்த் திட்டத்துக்கான குழாய்கள் பதித்த பின்னும், அந்த இடங்களை சரியாக மூடாத காரணத்தால், ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளன. ஏற்கனவே இந்த ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த பள்ளங்களும் சேர்ந்து மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.
ஆகஸ்ட் மாதத்திலேயே பணிகளை முடித்துத் தருவதாகச் சொன்ன குடிநீர் வடிகால் வாரியம், இன்னும் பணிகளை முடித்து, ரோட்டை ஒப்படைக்காததால் ரோடு சீரமைப்பு பணியைத் துவக்க முடியவில்லை என, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகின்றனர். குறைந்தபட்சம், குழாய் பதித்த இடங்களில் மண்ணை முழுமையாக நிரவினால், வாகனங்கள் செல்ல முடியும். அதையும் செய்யாமல் இருப்பதால், வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக ரோடு மாறியுள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘குழாய்கள் பதித்து விட்டோம்; வேறு பல குழாய்கள் இடையில் வந்தன. அவை உடையாமல் பணி செய்ய வேண்டியிருந்தது. மின் கம்பங்களை அகற்ற வேண்டியிருந்தது. இரவில் மட்டுமே பணிகளைச் செய்வதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. பள்ளம் உள்ள பகுதிகளில் மண் நிரவ ஏற்பாடு செய்துள்ளோம். தீபாவளி முடிந்ததும், இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.