பாம்பன் பாலத்தில் இரண்டு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நேர்கின்றன. கடந்த வாரம் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். (இந்த விபத்து பற்றிய நமது செய்தி, https://nalaiyavaralaru.com/2022/10/பாம்பன்-பாலத்தில்-பேருந்/)
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விபத்தில் பேருந்து ஒன்று சாலையோர தடுப்பில் மோதி நின்றதால் கடலில் விழாமல் தப்பியது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பேருந்து, கயிறு கட்டி மீட்கப்பட்டது. அந்த விபத்து நடந்த பின்பும், காவல்துறையினர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. ராமேஸ்வரத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடுவதால் பாம்பன் பாலத்தின் மீது வாகனங்கள் மெதுவாகச் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், இன்று காலை பாம்பன் பாலத்தில் மீண்டும் பெரும் விபத்து நிகழ்ந்திருக்கிறது. இராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்தும், திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் பேருந்துகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக பேருந்து ஓட்டுநர்கள் உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பன் பாலத்தில் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
பாலத்தில் தடுப்பு சுவர் இருப்பதால் விபத்தில் சிக்கும் பேருந்துகள் கடலுக்குள் விழும் அபாயம் தடுக்கப்படுகிறது. விபத்து ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
– பாரூக், சிவகங்கை.