பத்திரிகையாளர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தி மரியாதை குறைவாக நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்ளும்(பேசி வரும்) தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. அண்ணாமலையை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது … தன் அநாகரிகமான செயலுக்கு திரு. அண்ணாமலை வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வலியுறுத்துகின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகம் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.
அதனடிப்படையிலயே ஊடகத்துறையில் செயல்படும் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மக்களின் முகமாக கேள்வி எழுப்பும் *பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வதும், பதில் சொல்லாமல் கேள்வியை புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் கேள்வி கேட்கின்ற *நிருபர்களை அநாகரிகமான முறையில் விமர்சித்து மரியாதை குறைவாக நடத்துவது அரசியல் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு அழகல்ல. ஆனால் அப்படிப்பட்ட *அநாகரிகமான செயலை தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. அண்ணாமலை தொடர்ந்து செய்து வருகின்றார்.
(27-10-2022) வியாழக்கிழமை பாஜக தலைவர் திரு. அண்ணாமலை கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க முயன்றபோது,மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரிங்களே … என்னது” என ஆவேசத்துடன் தரக்குறைவாக பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்திருக்கின்றார். அமைச்சர் செந்திபாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது கேள்வியை புறக்கணித்து பதில் சொல்லாமலே சென்றிருக்கலாம். ஆனால் ”நாய், பேய், சாராய வியாபாரிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்துவிட்டு ”நகருங்க” என்று பொதுவெளியில் பத்திரிகையாளர்களை உதாசீனப்படுத்தி, நாகரிகமற்ற முறையில் திரு. அண்ணாமலை நடந்து கொண்டிருக்கின்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த நிருபர்களை முகம் சுழிக்க வைத்ததோடு மட்டுமின்றி, கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் திரு.அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட இந்த நாகரிகமற்ற போக்கை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பாஜக எனும் தேசிய அளவிலான கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பொறுப்பில் இருக்கும் *திரு. அண்ணாமலை, ஆக்கப்பூர்வமான அரசியல் கருத்தை முன்வைப்பார் என்ற நம்பிக்கையில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து சீர்குழைத்து வருகின்றார்.
கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் மீது கட்சி சாயம் பூசுவது, மிரட்டும் விதத்தில் நடந்து கொள்வது திரு. அண்ணாமலையின் அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டு வருகின்றது. எனவே பொது வாழ்க்கையில் ஈடுபடும் *தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. அண்ணாமலை, அறநெறிகளை அறிந்து பொதுவெளியில் நடந்துகொள்ள வேண்டும். என்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துகொள்கிறது. கடலூரில் நடந்த சம்பவத்தை மீண்டும் கண்டிப்பதோடு மட்டுமின்றி, திரு. அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் வலியுறுத்துகின்றது. கடலூர் பத்திரிகையாளர்களின் *ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் முழு ஆதரவு தருகின்றது.
இப்படிக்கு
தலைவர் / செயலாளர், கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.