இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேய ஆட்சியின் போது கடந்த 1922ஆம் ஆண்டு பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு, தற்போது 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களிடையே அதிகளவில் பணியாற்றிய துறை என்று சொல்லப்படுவது சுகாதாரத்துறைதான். 2020ல் கோவிட் தொற்று வந்த கால கட்டத்தில் அது எப்படிப் பரவுகிறது, அதை எப்படி எதிர் கொள்வது என்பது தெரியாதிருந்த நேரங்களில், அந்தச் சவால்களை எதிர்கொள்ள பொது சுகாதாரத்துறை உடனுக்குடன் களத்தில் இறங்கிச் செயல்பட்டது.
பொது சுகாதாரத்துறை மட்டுமின்றி மருத்துவக் கல்லூரிகள், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகள் களத்தில் இறங்கி இணைந்து வேலை பார்த்தாலும், அதில் பொதுசுகாதாரத்துறைதான் அந்தத் தொற்று நோய் தடுப்பிற்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது. இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையில் 100ஆவது வருடத்தினை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட அந்தத்துறையின் துணை இயக்குனர் விஜயசந்திரன் அறிவுறுத்தலின் பேரில் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (15.10.2022) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு தலைமையில் மருத்துவமனை பணியாளர்களுக்கு கோலப் போட்டி, மண்பானை உடைத்தல், ஓட்டப் பந்தயம் மற்றும் வாளியில் நீர் நிறப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கவிதை வாசிக்கும் போட்டியும் அரங்கேறியது.
நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் முத்தமிழ்செல்வி, செந்தில்குமார், RBSK மருத்துவர் செந்தில்குமார், பிரேம்குமார் மற்றும் சித்த மருத்துவர் சரவணன், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர்கள், பல்வேறு துறை சார்ந்த கள ஆய்வாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை ஓட்டுநர்கள் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். விழா ஏற்படுகளை சுகாதார ஆய்வாளர்கள் எழில்மாறன், பிரித்திவிராஜ் மற்றும் ictc ஆலோசகர் தங்ககுமார் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
– பாரூக், சிவகங்கை.