கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கடந்த 23.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவை மாநகர் உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜெமேஷா முபீன் என்கிற நபர் மரணம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற காவல்துறை சோதனையில் மரணம் அடைந்த முபீன் வீட்டில் இருந்து வெடிப் பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது இச்சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பே துரித நடவடிக்கையும், விசாரணையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
நமது தேசத்தின் அனைத்து மக்களின் உயிர்களும், உடைமைகளும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.வன்முறைகளும், தீவிரவாதமும் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அவை ஒழிக்கப்பட வேண்டும். வன்முறையாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. கோவையில் பதட்டத்தை தணிக்கவும், இயல்பான சூழ்நிலையை கொண்டு வரவும் உண்மை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவும் பல்வேறு ஒத்துழைப்புகளை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் , கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு தொடர்ந்து வழங்கி வருகிறது .
வன்முறையாளர்களுக்கும் தீவிரவாதிகளாகளுக்கும் மதச்சாயம் பூசி சிறுபான்மை சமூக மக்களை தனிமைப்படுத்த பல சக்திகள் முயல்கின்றன. அவற்றுக்கு இஸ்லாமிய சமூக மக்கள் வாய்ப்பளித்து விடக் கூடாது என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. கோவையில் கடந்த காலங்களைப் போல பகுதி வாரியாக அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய “காவல்துறை நண்பர்கள் குழு” ஏற்படுத்த வேண்டும். அதன் வாயிலாக காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறைந்து தவறான நடவடிக்கைகள் உள்ள நபர்களை விரைவாக அடையாளம் காணும் சூழல் உருவாகும் என்பதை மாவட்ட நிர்வாகங்களுக்கு கூட்டமைப்பின் சார்பாக தெரியப்படுத்தி கொள்கிறோம்.
அனைத்து மதத்தை பின்பற்றும் மக்களிலும் தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். அந்த தனிநபர்களின் தவறுகளை அந்த மதத்துடன், சமூகத்துடன் இணைத்து பார்க்கப்படுவதில்லை. அவர்கள் சார்ந்த மதத்தை குற்ற படுத்துவதில்லை. ஆனால் முஸ்லீம் மதப் பெயர் உள்ள நபர்கள் தவறு செய்யும் பட்சத்தில் , அந்த தவறுகள் இஸ்லாமிய மதத்துடன் இணைக்கப்பட்டு, இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு நபரையும் குற்றவாளிகளாக சித்தரிப்பதும் கலாச்சாரங்களை சந்தேகபடுவதும் வேதனை அளிக்கிறது. முஸ்லீம் சமுகத்தின் மீதும், இஸ்லாத்தின் மீதும் வெறுப்பை பரப்பும் நச்சு பேச்சுகள், இணையதள பதிவுகள் மற்றும் பரப்புரைகள், இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களில் சம்பந்தப்பட்டவர்களை கண்டிக்கவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் இந்துமத தலைவர்கள் முன்வரவேண்டும்.
அவர்களை திருத்த முயற்சி எடுக்க வேண்டும் எனவும், தெரிந்தே இத்தவறுகளை செய்பவர்களை காவல்துறை அடையாளம் கண்டு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. NIA போன்ற விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் உள்ள ஜெமேஷா முபீன் பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்த முயற்சித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜெமேஷா முபீன் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு NIA அமைப்பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. NIA – விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் தொடர்ந்து NIA வின் கண்காணிப்பு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஜெமேஷா முபீன் இத்தகைய வன்முறை செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெமேஷா முபீனை NIA கண்காணிக்கவில்லையா? அல்லது மத்திய உளவு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த குற்றம் நடைபெற்றுள்ளதா? என்ற பெரும் சந்தேகம் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது .
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை முதல் இலக்காக வைத்து செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. மேலும் கடந்த ஒரு மாத காலமாக கோவையில் கலவரம் நடைபெற போவதாகவும், கோவையில் லாரிப்பேட்டையில் புதிய இயக்கம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் சங்பரிவார அமைப்புகளின் நிர்வாகிகள் ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கும் அரசு உளவுதுறைக்கும் தெரியாத இப்படியான விஷயங்களை குறித்து சங்பரிவார நிர்வாகிகள் கூறுவதும் அதனைத் தொடர்ந்து விரும்பத்தகாத நிகழ்வுகள் கோவையில் நடைபெறுவதும் பெரும் சந்தேகத்தையும் மேற்கண்ட கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்தக் குற்றத்தின் விசாரணையில் ஒரு பகுதியாக சங்கபரிவார அமைப்புகளின் நிர்வாகிகளையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இதுபோன்ற பதட்டமான சூழ்நிலைகளில் நிர்வாக நிர்ப்பந்தங்கள் தவிர்க்க இயலாதது.அந்த நிர்பந்தங்கள் காரணமாக பொய் வழக்குகள் பதியப்பட கூடாது என்பதையும் அது காவல்துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்து செல்லும் வாய்ப்பாகவும் அமையும் என்பதையும் காவல்துறையினர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பத்திரிக்கையாளர்கள் அவர்களின் பொறுப்புணர்ந்து பதற்றத்தை தணிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். யூகத்தின் அடிப்படையிலான பரபரப்பான செய்திகளையும் , குற்றவாளிகளை இஸ்லாமிய அடையாளத்துடன் தொடர்புபடுத்தும் கருத்துகளையுடைய செய்திகளை, எங்கள் மனவலிகளை,புரிந்து தவிர்க்க வேண்டும் எனவும் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
“அனைவரும் ஒன்றுபடுவோம்”
“பொறுப்புணர்ந்து செயல்படுவோம்”
“கோவையை மதபதட்டத்தில் இருந்து காப்போம்”
என கோவை ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இருந்தது.
-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.