வெள்ளலுார் கிடங்கில் தொடர்ந்து குப்பை கொட்டி வருவதால், பசுமை தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், நீதிபதி ஜோதிமணி இன்றும், நாளையும் ஆய்வு செய்கிறார்.
மாநகராட்சி அதிகாரிகள் ஒரு வித பதற்றத்தில் இருக்கின்றனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடம், வெள்ளலுாரில் இருக்கிறது. இங்கு, மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது. அதனால், நிலம், நீர், காற்று மாசுபடுவதாகவும், சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது, வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், மாநில கண்காணிப்பு குழு தலைவராக, நீதிபதி ஜோதிமணியை நியமித்து, ஆய்வுக்கு உத்தரவிட்டது.
இரு ஆண்டுக்கு முன் அவர், கள ஆய்வு செய்தபோது, மாநகராட்சி தரப்பில் பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. குப்பை உருவாகும் இடத்திலேயே அழிக்கவும், வெள்ளலுாரில் ‘பயோ மைனிங்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அளித்த உறுதியின்படி, மாநகராட்சி செயல்படவில்லை என, பசுமை தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இச்சூழலில், நீதிபதி ஜோதிமணி இன்றும், நாளையும் கோவையில் ஆய்வு செய்கிறார்.இன்று பகல், 3:00 மணிக்கு வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஆய்வு செய்யும் அவர், ஒண்டிபுதுார், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, பனைமரத்துார், பாரதி பார்க் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குப்பையில் உரம் தயாரிப்பு மையங்களை பார்வையிடுகிறார்.
நாளை (7ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். பகல், 12:30 மணிக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்க நேரும் என்பதால், குப்பைக்கிடங்கு தொடர்பாக மேற்கொண்டு வரும் பணிகளை, நீதிபதி முன்னிலையில் பட்டியலிட மாநகராட்சி அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.
அதற்காக, வெள்ளலுார் கிடங்கில் ‘பயோமைனிங்’ திட்டத்தில் பழைய குப்பை அழிக்கும் பணி, ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்று நடுவதற்கு நர்சரி உருவாக்கும் பணியை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் ஷர்மிளா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். மாநகராட்சியின் விளக்கத்தை நீதிபதி ஏற்பாரா அல்லது ‘டோஸ்’ விடுவாரா என்பது, ஆய்வின் இறுதியில் தெரியவரும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை.