இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண பயணமாக கோவை வருகை தந்தார்.
விடியற்காலை 4 மணிக்கு நகருக்குள் வந்தவர் யதார்த்த நிலையை அறிய விரும்பினார். கட்சியினருக்கு தகவல் தருவதற்கு முன்பாக, உக்கடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஒட்டுநர் விமல், அவருடன் வருகை தந்த கட்டிமேடு ரஹ்மத்துல்லா ஆகியோரை மட்டும் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த சாமானிய மக்களுடன் சென்று கலந்துரையாடினார்.
சாலையோர சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், சாமான்கள் வாங்க வந்த மக்கள் ஆகியோருடன் உரையாடினார்.
ராமர் கோயில் அருகிலும் சென்று அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்தவர்களிடமும் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
கைலி, டி ஷர்ட்டுடன் வந்த அவரை சிலர் அடையாளம் கண்டுக்கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். கடந்த ஒரு வார கால சூழல்களை விவரித்தனர்.
ஒரு சிறு கடை வியாபாரி அவருக்கு தேனீர் வாங்கிக் கொடுத்து உபசரித்து அங்குள்ள நிலவரங்களை விளக்கினார்.
இந்து – முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி இப்போதும் எல்லோரும் பழகி வருவதாகவும், சமீபத்திய விரும்பத்தகாத நிகழ்வுகள் அச்சத்தை தந்தாலும், உறவுகளை பாதிக்கவில்லை என்றும் ஒரே விதமான கருத்துகளை பலரும் கூறினர்.
வன்முறை, தீவிரவாதம். பிரிவினை பேசுபவர்களை நாங்கள் யாருமே எப்போதும் மதிப்பதில்லை என்றும் அவர்களை சாதி, மதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் சிலர் கூறினர்.
சில இடங்களில் பதட்டம் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் கூறினர்.
சில விரும்பத்தகாத சம்பவங்களை காட்டி யாரும் பதட்டத்தை தூண்டக்கூடாது என்றும், அப்படி பேசுபவர்களை யாருமே ஆதரிப்பதில்லை என்ற கருத்தும் பரவலாக வெளிப்பட்டது.
அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி பலரிடமும் உரையாடிய பொதுச் செயலாளர் அவர்கள், அமைதியான, ஒற்றுமையான வாழ்வையே இரு சமூகங்களை சேர்ந்த சாமானிய மக்கள் விரும்புவதை கேட்டறிந்தார்.
பிரிவினை சக்திகளை இரு சமூகங்களையும் சேர்ந்த கோவை மக்கள் எதிர்ப்பதும், தங்கள் பகுதி சகஜ நிலைக்கு விரைவாக மீண்டு வரும் என்ற நம்பிக்கையோடு இருப்பதும் வரவேற்கத்தக்க நல்ல செய்தியாகும்.
என தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.