கும்பகோணத்தில் நேற்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது சொந்த வீட்டில், தானே பெட்ரோல் குண்டு வீசிய கும்பகோணம் இந்து முன்னணி மாநகர செயலாளர் சக்கரபாணியை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வரும் சக்கரபாணி, கடந்த 5 ஆண்டுகளாக இந்து முன்னணி என்ற இந்துத்துவா அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று அதிகாலை தனது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக சக்கரபாணி, காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதேபோல் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினருக்கும் சக்கரபாணி தகவல் தந்தார். அண்மையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை இலக்கு வைத்து இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. சக்கரபாணியின் மேலக்காவேரி பகுதி வீட்டுகுச் சென்ற காவல்துறையினர் பெட்ரோல் குண்டாக வீசப்பட்ட பாட்டிலின் உடைந்த பகுதிகள், திரி ஆகியவற்றை கைப்பற்றினர்.
இதனிடையே கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா மற்றும் பாஜக பிரமுகர்களும் சக்கரபாணி இல்லத்தில் குவிந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி சென்னையில் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், கும்பகோண கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசியது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். மேலும், காவல்துறையினரின் மோப்பநாய் ‘டபி’ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனாலும், பெரிதான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில் சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து நேற்று மாலை சக்கரபாணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டில், தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிவந்தது. இதனைத் தொடர்ந்து சக்கரபாணியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த காலங்களில் போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்கும், சமூகப்பதட்டத்தை உருவாக்குவதற்கும், உட்கட்சி மோதல் உள்ளிட்ட காரணங்களால் இந்துத்துவா அமைப்பினர் தங்களுக்குத் தாங்களே பெட்ரோல் குண்டு வீசுவது, செட்டப் அடியாட்கள் மூலம் தாக்குதல் நடத்திக்கொள்வது என நாடகமாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– பாரூக், சிவகங்கை.
One Response
சிறப்பு வரவேற்க தக்க செய்தி. அதே போல எல்லா செய்திகளையும் எந்த பாகுபாடு இல்லாமல் தந்தால் தங்கள் தமிழகத்தின் மிக சிறந்த reporter என மதிக்கப்படுவீர் என வாழ்த்துகிறேன்.