சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வழியாகச் செல்லும் திண்டுக்கல் – காரைக்குடி சாலை, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின்பு பொதுமக்களையும், வாகனப் போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில் சாலை ஓரங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன.
அதேபோல சிங்கம்புணரி – மேலூர் சாலையிலும் அளவுக்கதிகமான ஆக்கிரமிப்புகள் உருவாகி, பொதுமக்கள் கடும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கி பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசனை செய்து, அதன்படி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அப்போதைய சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர், பொது அறிவிப்பு செய்திருந்தார்.
அதன் பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிங்கம்புணரி வணிகர் நலசங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு இரண்டாவது முறையாக தற்போதைய வருவாய் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகளின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன் விளைவாக சிலர் ஆக்கிரமப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்ட நிலையில், மற்றவர்களுக்கு இறுதியாக அறிவுறுத்தும் வகையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜபாண்டி, சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து சென்று திண்டுக்கல் சாலை, காரைக்குடி சாலை, மேலூர் சாலை மற்றும் வேங்கைப்பட்டி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு இறுதியாக அறிவுறுத்தினர்.
இன்று இரவுக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அவரவர் சொந்த செலவில் அகற்றப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் நாளை முதல் எந்த நேரமும் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படலாம் எனத் தெரிவித்தனர்.
பல்வேறு அழுத்தங்களைத் முறியடித்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பொதுமக்களுக்கும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பான சாலை பயணத்தை அரசு அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.