இருதய நோய்கள், புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை நான்கு முக்கிய தொற்றாத நோய்களாகும். ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மது ஆகியவை இவற்றின் காரணிகளாக உள்ளன. பல தொற்றா நோய்கள் பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ மரபணு அடிப்படையில் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவுவதாக உள்ளன. தொற்றா நோய்களானது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
சிங்கம்புணரியில் இந்தத் தோற்றா நோய்களைக் கண்டறிய, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சிவகங்கை மாவட்ட துணை இயக்குனர் விஜயசந்திரன் அறிவுறுத்தலின் பேரில் வீடு தேடி, தொற்றாநோய் கண்டறியும் சிறப்புப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று நடந்த நிகழ்வுக்கு பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் மரு.நபீஸாபானு தலைமை தாங்க, சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் அம்பலமுத்து நிகழ்வினை துவக்கி வைத்தார். பேரூராட்சியின் 18ஆவது வார்டு கவுன்சிலர் திவ்யா பிரேம்குமார் கலந்து கொண்ட இது போன்ற தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை நிகழ்வுகள், சிங்கம்புணரி நகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை செய்யப்படும்.
இன்றைய நிகழ்விற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் எழில்மாறன், பிரித்திவ் ராஜ் மற்றும் ருத்ரசேனா ஆகியோர் செய்திருந்தனர். பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மங்கையர்கரசி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
வீடுதேடி வரும் தொற்றாநோய் கண்டறியும் பரிசோதனையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் கேட்டுக்கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– பாரூக், சிவகங்கை.