தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளை பகுதியில் 20வது வார்டில் கீழ்கட்டளை ஏரியின் மதகை முன்பு பல்லாவரம் நகராட்சி உடைத்து அப்புறப்படுத்தியதன் காரணமாக, ஏரியின் போக்கு கால்வாய் உபயோகம் இன்றி இருக்கிறது. இந்த கால்வாயை சிலர் அவ்வப்போது ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த கால்வாயின் அருகாமையில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது, இவர்கள் இந்த கால்வாயை தான் பாதையாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த கால்வாயில் ஒரு பகுதி பிள்ளையார் கோயில் தெருவை ஒட்டி உள்ளதால் கால்வாயில் ஒரு பகுதிக்கு மாநகராட்சி சாலை அமைத்துள்ளது.
தற்பொழுது இந்த தண்ணீர் கம்பெனி, அவர்கள் சுத்திகரித்து மீதமுள்ள கழிவு நீரை தாம்பரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தில் கொண்டு சேர்க்க பொதுப்பணி துறையின் கால்வாயில் குழாய்கள் அமைத்து வருகின்றனர். மழை நேரத்தில் இந்த தண்ணீர் கம்பெனியோ மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்த கலவையில் சூழ்ந்து காணப்படுகிறது.
இப்படி சுகாதாரமற்ற நிலையில் இந்தத் தண்ணீர் கம்பெனி செயல்பட எந்த அரசு துறை அனுமதி அளித்தது? மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் அமைத்து தனியார் கம்பெனியின் கழிவு நீரை அப்புறப்படுத்த அனுமதி வழங்கியது யார்?
தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை? செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கீழ்கட்டளை ஏரியின் இந்த போக்கு கால்வாய்யை ஆக்கிரமிப்புகள் அகற்றி ஆழப்படுத்தி, நீர் வழித்தடமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.